மல்லிகார்ஜுன கார்கேவை மிரட்டிய கர்நாடக பாஜக வேட்பாளர்: தமிழக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்

மல்லிகார்ஜுன கார்கேவை மிரட்டிய கர்நாடக பாஜக வேட்பாளர்: தமிழக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்
மல்லிகார்ஜுன கார்கேவை மிரட்டிய கர்நாடக பாஜக வேட்பாளர்: தமிழக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த கர்நாடக மாநில சட்டமன்ற வேட்பாளர் மணிகண்டன் ரத்தோட் மீது தமிழக டிஜிபிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக கர்நாடக மாநில சட்டமன்ற வேட்பாளர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக டிஜிபிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர்கள் இல.பாஸ்கரன், தளபதி பாஸ்கர் மற்றும் தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் முத்தழகன் ஆகியோர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து இன்று புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, "கர்நாடகத்தில் சித்தாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் மணிகண்டன் ரத்தோட் என்பவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்வேன் என பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. இதன் மூலம் கர்நாடக தேர்தலில் பாஜக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது தெரியவந்தது. எனவே அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு மிரட்டல் விடுத்த ரத்தோட் மீது தமிழக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். அவரும் இது குறித்து ஆவணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஒரு புகார் ராஜஸ்தான் மாநில காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாகவும், அதேபோல் தமிழகத்திலும் வழக்குப்பதிவு செய்வார்கள் என உறுதியாக நம்புகிறோம். கர்நாடகாவில் தோல்வி பயம் காரணமாக பாஜக அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு எப்படியாவது காங்கிரஸ் கட்சி அரியணையில் ஏறுவதை தடுக்க நினைக்கிறது. இது ஒருபோதும் நடக்காது.

மேலும் வன்முறையும் அராஜகமும் இந்தியாவில் ஒருபோதும் நடக்காது. அகிம்சை வழியை ராகுல்காந்தி பின்பற்றி வருகிறார். பாரத் ஜோடோ யாத்திரையின் வெற்றியும் அகிம்சையும் ராகுல் காந்தியின் முகமும் கர்நாடகத்தில் பிரதிபலிப்பதால் எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று வெளிவந்துள்ள நிலையில் பாஜக மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தை ஆட வேண்டும் என்று பாஜக சட்டமன்ற வேட்பாளர் பேசியுள்ளார். இதற்கு பாஜக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருக்கே இது போன்ற நிலை. இந்திய துணை கண்டமே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in