நேரு இடத்தை பூர்த்தி செய்த ராகுல்: காங்கிரசார் நெகிழ்ச்சி!

ஸ்ரீநகரில் ராகுல்
ஸ்ரீநகரில் ராகுல்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்றோடு(ஜன.30) நிறைவடைய இருக்கும் சூழலில், ராகுல் காந்தியை நாட்டின் முதல் பிரதமரும் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஜவஹர்லால் நேருவுடன் ஒப்பிட்டு காங்கிரசார் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.

செப்.7 அன்று கன்னியாகுமரியில் தொடங்கியது ’பாரத் ஜோடோ யாத்ரா’ என்னும் ராகுல் காந்தியை முன்னிறுத்தி நடைபெற்ற ’இந்திய ஒற்றுமை பயணம்’. தொடர்ந்து கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் மார்க்கமாக தற்போது ஜம்மு காஷ்மீரில் நிலை கொண்டுள்ளது. பல்வேறு சவால்களுடன் நடைபோட்ட நடைபயணம், ஜன.30, இன்றுடன் நிறைவு பெறுகிறது.

பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஸ்ரீநகரின் பிரசித்தி பெற்ற லால் சௌக் பகுதியில் நேற்று ராகுல் காந்தி தேசியக் கொடியேற்றினார். அந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்கதாக காங்கிரசார் நினைவுகூர்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் இதற்கு முன்னதாக அங்கு தேசியக் கொடியேற்றியவர் ஜவஹர்லால் நேரு மட்டுமே. 1948-ல் அவர் அங்கே தேசியக் கொடியேற்றி சிறப்பித்தார். ஜம்மு காஷ்மீரின் முக்கிய தலமான லால் சௌக் பகுதியில் அதன் பிறகான காங்கிரஸ் தலைவர்கள் எவருமே, ஏனோ கொடியேற்ற வாய்ப்பு அமையவில்லை. அந்த இடத்தை தற்போது ராகுல் காந்தி பூர்த்தி செய்திருக்கிறார்.

லால் சௌக்கில் கொடியேற்றும் ராகுல்
லால் சௌக்கில் கொடியேற்றும் ராகுல்

தற்போதைய அரசியல் சூழலில் நாட்டின் முதல் பிரதமர் நேருவின் கொள்கைகள், சிறப்புகள் மற்றும் சாதனைகளை மீண்டும் பேச ஆரம்பித்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, அதன் பிரதான முகமான ராகுல் காந்தியை நேருவுடன் ஒப்பிடும் வரலாற்று நிகழ்வாக இதனை அடையாளம் கண்டு பெருமிதம் கொண்டு வருகின்றனர்.

14 மாநிலங்களின் 75 மாவட்டங்களின் ஊடாக 134 நாட்களில் 3570 கிமீ-க்கும் மேலாக நடைபோட்டிருக்கும் பாரத் ஜோடோ யாத்திரை, இன்று ஸ்ரீநகரில் நிறைவு பெறுவதை அடுத்து காலை 10 மணியளவில் தொடங்கி சமூக ஊடகங்கள் வாயிலான நேரலை ஒளிபரப்பை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in