பீகாரில் மல்லிகார்ஜுன கார்கேவின் ஹெலிகாப்டர் சோதனை... காங்கிரஸ் கடும் கண்டனம்!

பீகாரில் மல்லிகார்ஜுன கார்கேவின் ஹெலிகாப்டர் சோதனை... காங்கிரஸ் கடும் கண்டனம்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது கார்கேவின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டதால், எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் குறிவைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மற்றும் முசாபர்பூர் மக்களவைத் தொகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரங்களில் உரையாற்றினார். அப்போது சமஸ்திபூரில் கார்கேவின் ஹெலிகாப்டரில் சோதனை செய்யப்பட்டதாக பீகார் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் தனது எக்ஸ் இணையதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காவல்துறையினர் உட்பட அதிகாரிகள் ஹெலிகாப்டர் சுற்றி சோதனை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கார்கே ஹெலிகாப்டரில் சோதனை
கார்கே ஹெலிகாப்டரில் சோதனை

அந்த பதிவில், "காங்கிரஸ் தலைவர்களின் ஹெலிகாப்டர்களை மட்டும் சோதனை செய்வது வழக்கமானதா என்பதையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உயர்மட்ட தலைவர்களிடமும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டதா என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையம் இதுபோன்ற சோதனைகள் அனைத்தையும் பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லையெனில் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமே குறிவைத்து அவர்களைத் தடுக்கிறது என்றும், என்டிஏ தலைவர்களை சுதந்திரமாகச் செல்ல அனுமதிப்பதாகக் கருதப்படும். இவ்வாறு சோதனை செய்யப்பட்ட அனைத்து தலைவர்களின் வீடியோக்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் கேரளாவில் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in