மார்ச் 26-ல் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கூட்டம்

மார்ச் 26-ல் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கூட்டம்

முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்

காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டம், வரும் சனிக்கிழமை (மார்ச் 26) நடக்கவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அமைப்புப் பிரிவு பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் நடத்துவது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான முன்னெடுப்புகள், பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களைத் திட்டமிடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 மாநிலத் தேர்தலில் கிடைத்த தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அமைப்புரீதியிலான மாற்றங்கள் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ் தலைமைக்கு ஜி-23 தலைவர்கள் அழுத்தம் தந்துவருகின்றனர்.

ஜி-23 தலைவர்கள் தனியாகக் கூட்டம் நடத்தி ஆலோசித்துவந்த நிலையில், அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியது, அக்குழுவின் முக்கியத் தலைவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசியது போன்ற நிகழ்வுகள் இரு தரப்புக்கும் நெருங்கிவருவதற்கான சமிக்ஞைகளை உணர்த்தின. அத்துடன், அக்குழுவின் ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, விவேக் தன்கா ஆகிய தலைவர்கள் மார்ச் 22-ல் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

சோனியா காந்தி தற்போது காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பதவி வகிக்கிறார். கட்சிக்கு நிரந்தரத் தலைவர் அவசியம் என ஜி-23 தலைவர்கள் வலியுறுத்திவரும் நிலையில், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த சோனியா காந்தி தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் கட்சியில் அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்படும் என அவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in