காங்கிரஸுக்கு கடும் நெருக்கடி: இமாசல பிரதேச தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

காங்கிரஸுக்கு கடும் நெருக்கடி: இமாசல பிரதேச தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கு 62 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி இமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்புடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நேற்று முதல் கட்டமாக 46 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.

இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் குல்தீப் சிங் ரத்தோர் மற்றும் சுக்விந்தர் சிங் சுகு, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி , முன்னாள் அமைச்சர் ஆஷா குமாரி , முன்னாள் அமைச்சர் கவுல் சிங், சமீபத்தில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறிய கிமி ராம் உள்ளிட்ட பலரின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 68 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பினை தொடர்ந்து பாஜக இன்று முதல் கட்டமாக 62 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை அறிவித்தது. இதில் ஒரு கேபினட் அமைச்சர் உட்பட 11 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் வழங்கப்படவில்லை.

முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் அவரது தற்போதைய தொகுதியான செராஜிலேயே களமிறங்குகிறார். மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரும், சிம்லா நகர்ப்புற தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவுமான பரத்வாஜ் கசும்ப்டி தொகுதியில் போட்டியிடுகிறார். தரம்பூர் எம்எல்ஏவாக இருந்த அமைச்சர் மகேந்திர சிங்கிற்கு பதிலாக அவரது மகன் ரஜத் தாக்கூர் போட்டியிடுகிறார். ஜுப்பல்-கோட்காய் தொகுதியில் சேத்தன் ப்ராக்தாவை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவருக்கு கட்சி சீட் மறுத்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் சுக் ராமின் மகன் அனில் சர்மா மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான பிரேம் குமார் துமாலின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. அவரது மகன் அனுராக் தாக்கூர் மத்திய அமைச்சராக உள்ளார். அவர் போட்டியிட விருப்பம் இல்லை என்று கட்சித் தலைமைக்கு தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வேட்பாளர்களில் எட்டு பேர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் மூன்று இடங்கள் மட்டுமே எஸ்டி பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் இந்தப் பட்டியலில் ஐந்து பெண் வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர், எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதுவரை அறிவித்துள்ள 46 வேட்பாளர்களில் 3 பெண்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

68 உறுப்பினர்களை கொண்ட இமாசல பிரதேச மாநில சட்டசபைக்கு நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 25 ஆகும். டிசம்பர் 8 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தற்போதைய சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 43 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 22 எம்எல்ஏக்களும் உள்ளனர். சட்டசபையில் இரண்டு சுயேச்சைகளும், ஒரு சிபிஎம் எம்எல்ஏவும் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in