அணி மாறிய இளைஞர் அணித் தலைவர்: காங்கிரஸ் கட்சிக்குப் பதிலடி கொடுக்கும் பாஜக!

அணி மாறிய இளைஞர் அணித் தலைவர்: காங்கிரஸ் கட்சிக்குப் பதிலடி கொடுக்கும் பாஜக!

குஜராத் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் பதவியிலிருந்து சில நாட்களுக்கு முன்பு விலகிய விஸ்வநாத் வகேலா, பாஜகவில் நேற்று இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாகக் குஜராத் அரசியலில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். இதைத் தொடர்ந்து குஜராத்தில் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தியும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தார். இது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை விலகி பாஜகவில் இணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில் குஜராத் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் விஸ்வநாத் சிங் வகேலா சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகினார். குடும்ப அரசியல், கோஷ்டி மோதல் அதிகரித்து விட்டதால் காங்கிரஸிலிருந்து விலகியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் காந்தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேற்று வந்த அவர் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கோர்தன் ஜடஃபியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் முகம் மாறிவிட்டது. சர்தார் வல்லபாய் படேல் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரைக் கூட உச்சரிக்கக் காங்கிரஸ் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், தேசிய நோக்கம் கொண்ட கொள்கை கொண்ட பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார்.

பாஜகவின் முயற்சியால் தொடர்ந்து அணிமாறும் தலைவர்களால் காங்கிரஸ் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in