’நான் துரோகம் செய்யவில்லை’ - 20 நாட்களுக்குப் பின் வெளியில் வந்தார் சூரத்தின் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்!

நிலேஷ் கும்பானி
நிலேஷ் கும்பானி

காங்கிரஸ் தலைவர்கள் நான் துரோகம் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். இருப்பினும், முதலில் என்னைக் காட்டிக் கொடுத்தது காங்கிரஸ்தான் என்று சூரத்தில் காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த நிலேஷ் கும்பானி குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத்தில் உள்ள சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் அந்த தொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நிலேஷ் கும்பானி, 20 நாட்களாக தலைமறைவாக இருந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிலேஷ் குமாபானி, “ காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சக்திசிங் கோஹில் மற்றும் கட்சியின் ராஜ்கோட் மக்களவை வேட்பாளர் பரேஷ் தனானி ஆகியோருக்கு மரியாதை செலுத்துவதால் தான் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன்.

வேட்புமனு தாக்கல் செய்த நிலேஷ் கும்பானி
வேட்புமனு தாக்கல் செய்த நிலேஷ் கும்பானி

காங்கிரஸ் தலைவர்கள் நான் துரோகம் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். இருப்பினும், 2017 சட்டமன்றத் தேர்தலில் சூரத்தில் உள்ள கம்ரேஜ் சட்டமன்றத் தொகுதியில் எனது டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்து, முதலில் என்னைக் காட்டிக் கொடுத்தது காங்கிரஸ்தான். முதல் தவறை செய்தது காங்கிரஸ் தான், நான் அல்ல.

நான் இதைச் செய்ய விரும்பவில்லை.ஆனால் எனது ஆதரவாளர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வருத்தமடைந்தனர். ஏனெனில் சூரத்தில் காங்கிரஸ் கட்சி ஐந்து தலைவர்களால் நடத்தப்படுகிறது. அவர்களும் வேலை செய்யவில்லை, மற்றவர்களையும் வேலை செய்ய அனுமதிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் இந்தியக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் நான் இங்கு பிரச்சாரம் செய்தபோது இந்தத் தலைவர்கள் ஆட்சேபனைகளை எழுப்பினர்” என்று அவர் கூறினார்.

சூரத்தில் நடந்தது காங்கிரஸைப் பழிவாங்கும் நடவடிக்கையா என்று கேட்டதற்கு, கும்பானி நேரடியாகப் பதிலளிக்க மறுத்து, 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கான குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

நிலேஷ் கும்பானி
நிலேஷ் கும்பானி

சூரத் மாநகராட்சியின் காங்கிரஸ் கார்ப்பரேட்டராக பணியாற்றிய கும்பானி, 2022 சட்டமன்றத் தேர்தலில் கம்ரேஜ் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அவர் பாஜகவிடம் தோல்வியடைந்தார்.

ஏப்ரல் 21ஆம் தேதி நிலேஷ் கும்பனியின் வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டது.. அவரை முன்மொழிந்த மூன்று பேரின் கையெழுத்து போலி என்று கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல தற்செயலாகக் காங்கிரஸின் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. ஏப்ரல் 22 அன்று, பிஎஸ்பியின் வேட்பாளர் உட்பட மற்ற அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து, பிஜேபியின் முகேஷ் தலால் சூரத்திலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து கும்பானி ஏப்ரல் 22 முதல் தலைமறைவாக இருந்தார். நிலேஷ் கும்பானி பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in