‘ஆபரேஷன் தாமரை’: கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் - ஜார்க்கண்டிலும் ஆட்சியைக் கவிழ்க்க சதியா?

‘ஆபரேஷன் தாமரை’: கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் - ஜார்க்கண்டிலும் ஆட்சியைக் கவிழ்க்க சதியா?

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் 3 ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிகளவிலான பணத்துடன் பிடிபட்ட நிலையில், ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் “ஆபரேஷன் தாமரை” திட்டம் அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. மகாராஷ்டிராவைப் போல தற்போது ஜார்க்கண்டிலும் சோரனின் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, கிஜ்ரியைச் சேர்ந்த ராஜேஷ் கச்சாப் மற்றும் கோலேபிராவைச் சேர்ந்த நமன் பிக்சல் ஆகிய மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சென்ற காரை, மேற்குவங்க மாநிலம் பஞ்ச்லா காவல் நிலையப் பகுதியில் உள்ள ராணிஹாட்டி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 16 - ல் நேற்று இரவு போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக பேசிய ஹவுரா கண்காணிப்பாளர் ஸ்வாதி பங்காலியா, " எங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில், நாங்கள் அந்த வாகனத்தை மறித்தோம். வாகனத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் உட்பட 5 பேர் இருந்தனர். வாகனத்தில் ஏராளமான பணமும் இருந்தது. மொத்த தொகையை கண்டறிய பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்படுகின்றன. எம்.எல்.ஏ.க்களிடம் பணத்தின் ஆதாரம் மற்றும் அது எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இதுபற்றி பேசிய ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர், “விசாரணை முடியும் வரை இதைப் பற்றி பேசுவது நியாயமானதாக இருக்காது. கைது செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். அசாம் மாநிலம் அரசுகளை கவிழ்க்க மையப்புள்ளியாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா நாடகமும் அசாமில்தான் நடந்தது” என தெரிவித்தார்

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ஜார்கண்டில் பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ ஹவுராவில் அம்பலமாகியுள்ளது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே- தேவேந்திர பட்னாவிஸ் எனும் இரட்டையர்கள் ஆட்சியை நிறுவியது போல ஜார்கண்டிலும் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in