ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து அஜய் மாக்கன் ராஜினாமா? - காரணம் என்ன?

அஜய் மாக்கன்
அஜய் மாக்கன்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து அஜய் மாக்கன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக அஜய் மாக்கன் இருந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில், காங்கிரஸ் தலைவர் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து அசோக் கெலாட் விலக வேண்டும் என்ற நெருக்கடி உருவானது. அப்போது அசோக் கெலாட்டுக்கு விசுவாசமான 90 எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்கக்கூடாது என போர்க்கொடி தூக்கியதுடன், சபாநாயகரிடம் தங்களின் ராஜினாமா கடிதத்தையும் அளித்தனர்.

இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அஜய் மாக்கன் மற்றும் மல்லிகார்ஜுன கார்கேயை காங்கிரஸ் மேலிடம் ஜெய்ப்பூருக்கு அனுப்பியது. ஆனால் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இவர்களை சந்திக்க மறுத்தனர். இதன் காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டது. டெல்லி திரும்பிய இருவரும் ராஜஸ்தான் நிகழ்வு குறித்து தலைமைக்கு அறிக்கையளித்தனர். அதன்பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடாமல், ராஜஸ்தான் முதல்வர் பதவியில் அசோக் கெலாட் தொடர்ந்தார். இதன் பின்னர் ராஜஸ்தான் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அஜய் மாக்கன் எதிர்பார்த்தார், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாகவே காங்கிரஸின் ராஜஸ்தான் பொறுப்பாளர் பதவியில் இருந்து மாக்கன் விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட்
அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட்

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மாக்கன் எழுதியதாக சொல்லப்படும் ராஜினாமா கடிதத்தின் விவரங்களும் கசிந்துள்ளன. அதில், "கடந்த மூன்று தலைமுறைகளாக காங்கிரஸின் சித்தாந்தத்துடன் திருமணமாகி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர காங்கிரஸ் அரசியலில் இருப்பதால், நான் எப்போதும் ராகுல் ஜியின் தீவிர சீடராக இருப்பேன், அவர் மீது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு நம்பிக்கை உள்ளது. தற்போது நான் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை. பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன். பாரத் ஜோடோ யாத்ரா மாநிலத்திற்குள் நுழையவுள்ளது, டிசம்பர் 4ம் தேதி இடைத்தேர்தலும் நடக்கிறது. எனவே டிசம்பர் முதல் வாரத்திற்கு முன்பாக, புதிய ராஜஸ்தான் பொறுப்பாளரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

செப்டம்பர் மாத ராஜஸ்தான் நெருக்கடியின் போது, அஜய் மாக்கன் குறிப்பாக மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் மற்றும் சாந்தி தரிவால் ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார். அவர்கள் அசோக் கெலாட்டை மட்டுமே முதல்வராக ஏற்போம் என்று தீர்மானத்தை நிறைவேற்ற எம்.எல்.ஏ.க்களின் போட்டிக் கூட்டத்தை நடத்தினர்.

முன்னதாக, நவம்பர் 2ம் தேதி சச்சின் பைலட் ராஜஸ்தானில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அசோக் கெலாட்டுக்கு விசுவாசமான எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்திருந்தார். இந்த சூழலில் அஜய் மாக்கனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in