ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பும் கொண்டாடுவதால் குழப்பம்: தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?

ஈபிஎஸ் - ஓபிஎஸ்
ஈபிஎஸ் - ஓபிஎஸ்ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பும் கொண்டாடுவதால் குழப்பம்: தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம், ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்பும் கொண்டாடுவதால், தீர்ப்பு யாருக்கு சாதகம் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், "அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம். ஒரேயொரு வேட்புமனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால் இத்தகைய பரிந்துரையை அளிக்கிறோம் . ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை முன்கூட்டியே மார்ச் 22ம் தேதி விசாரிக்கப்பட்டு, மார்ச் 24ம் தேதி தீர்ப்பளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு தரப்புமே கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, எனவே அவர்களுக்கு இது பெரும் பின்னடைவு, எனவே இந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகம் என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஓபிஎஸ் தரப்பில் தேர்தலுக்கு தடை விதிக்க கோரிக்கை வைத்தனர், அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதேபோல தேர்தலை நடத்தவும் தடைவிதிக்கவில்லை. எனவே இது எங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்று ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட அவசர முறையீட்டை நீதிபதி குமரேஷ்பாபு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தங்களின் வாதங்களை முன்வைத்தனர், அதனைத் தொடர்ந்து தீர்ப்பு வெளியானது. மார்ச் 24ம் தேதி தீர்ப்பு வெளியாகும் போதுதான், சட்டப்போராட்டம் யாருக்கும் முழுமையான வெற்றியைக் கொடுக்கப் போகிறது என்பது தெரியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in