கொந்தளித்த பழனிமாணிக்கம்... மாசெ ஆதரவாளர்கள் தாக்குதல்: களேபரத்தில் முடிந்த தஞ்சை திமுக உட்கட்சி தேர்தல்

பரபரப்பாக காணப்படும் தஞ்சை திமுக அலுவலகம்
பரபரப்பாக காணப்படும் தஞ்சை திமுக அலுவலகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக உட்கட்சித் தேர்தலிலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தில், தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரனின் ஆதரவாளராக முரசொலியும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் ஆதரவாளராக ஜெயராஜ் என்பவரும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் ஒன்றிய செயலாளராக முரசொலி வெற்றி பெற்றதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியானது. இதனை அறிந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், போட்டி இருந்தால் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலையில் இங்கு போட்டி இருக்கும்போது தேர்தல் நடத்தாமல் எதற்காக, யாரை கேட்டு வெற்றியை அறிவித்தீர்கள் என தேர்தல் அதிகாரிகளை கேட்டார். அவர்கள் அளித்த பதிலில் திருப்தி அடையாத பழனிமாணிக்கம் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினார். அப்போது துரை சந்திரசேகரின் ஆதரவாளர்கள் அவரது, காரை கைகளால் தாக்கியும், அவரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியும் ஆர்பாட்டம் செய்தனர். பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் ஒரு சிலர் தாக்கப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் உடனடியாக ஒன்று திரண்டு கலைஞர் அறிவாலயத்தின் உள்ளே கும்பலாக நுழைந்தனர். பழனி மாணிக்கத்தை அவமானப்படுத்தியதை கண்டித்தும், மத்திய மாவட்ட செயலாளர் சந்திரசேகர் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உட்கட்சி தேர்தலில் இப்படி இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் தொடராமல், இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று தலைமை உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று திமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in