ஓபிஎஸ், ஈபிஎஸ்சுக்கு எதிராக அவதூறு: 4 வழக்குகளில் டியூப்பர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்

ஓபிஎஸ், ஈபிஎஸ்சுக்கு எதிராக அவதூறு: 4 வழக்குகளில் டியூப்பர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்

முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்தும், பிரதமர் பயண விவரங்கள் குறித்தும் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட 4 வழக்குகளில் யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றம் குறித்தும், நீதிபதி குறித்தும் அவதூறு கருத்து பரப்பியதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன் தொடர்ச்சியாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் பதிவு செய்த 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு முன்னாள் முதல்வர்கள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்தை பதிவிட்டதாக 2 வழக்குகளும், 2021-ம் ஆண்டு பிரதமருடைய பயண விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதற்காக 2 வழக்குகள் என மொத்தம் 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 12-ம் தேதி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை முறையாக கைது காட்ட போலீஸார் அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வரும் 25-ம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் இருந்து 4 வழக்குகளிலும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளிலும் சவுக்கு சங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த வழக்கு சம்பந்தமாக பொது வெளியில் பேசக்கூடாது. தினமும் சம்பந்தப்பட்ட அதிகாரி முன் ஆஜராகி கைழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in