தினமும் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்: திமுக எம்.பி மகனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன்

தினமும் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்: திமுக எம்.பி மகனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன்

பேருந்தை கடத்திய வழக்கில் கைதான திமுக எம்.பி திருச்சி சிவா மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திமுக மாநிலங்களவை குழுத் தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவரது கார் மீது ஜூன் 11-ம் தேதி தனியார் பேருந்து மோதியது. இதில், சேதமடைந்த தனது காரை சீரமைப்பதற்கான செலவுத்தொகையை தனியார் பேருந்து நிறுவனம் வழங்கவில்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு பேருந்தை ஜூன் 19-ம் தேதி கடத்திச் சென்றதாக சூர்யா சிவா மீது திருச்சி கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் அவரை கைதும் செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி சூர்யா சிவா, உயர் நீதிமன்ற கிளை மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், பேருந்து மோதி சேதமடைந்த எனது காரை சீரமைப்பதற்கான செலவு தொகை ரூ.5.40 லட்சத்தை சர்வீஸ் சென்டருக்கு வழங்க முதலில் தனியார் பேருந்து நிறுவனத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு பணம் தர மறுத்துவிட்டனர்.

சர்வீஸ் சென்டர் உரிமையாளர் என்னிடம் போனில் பேசி, மொத்த செலவில் 60 சதவீத பணத்தை செலுத்தக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து நான் பேருந்து நிறுவன உரிமையாளரைத் தொடர்பு கொண்டேன். அதற்கு அவர் பணத்துக்கு உத்தரவாதமாக தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை எனது இடத்துக்கு அனுப்பி வைப்பதாகவும், பணத்தைச் செலுத்திய பிறகு பேருந்தை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

அதன்படி பேருந்து ஒன்றை என் இடத்துக்கு அனுப்பியும் வைத்தார். அப்படித்தான் தனியார் நிறுவன பேருந்து என் இடத்துக்கு வந்தது. ஆனால் பேருந்தை நான் கடத்தியதாக ஆளுங்கட்சியினர் தூண்டுதல் பேரில் வழக்குப்பதிவு செய்து என்னை போலீஸார் கைது செய்துள்ளனர். 15 நாளாக சிறையில் இருக்கிறேன். ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தாளை முத்தரசு வாதிட்டார். விசாரணைக்கு பின்னர், சூர்யா சிவாவுக்கு ஜாமீன் வழங்கி, அவர் தினமும் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் காலை 10.30க்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in