பாஜகவுடன் உறவை பலப்படுத்த துடிக்கும் பினராயி அரசு!

சர்ச்சையைக் கிளப்பும் கேரள காங்கிரஸ்
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

"காங்கிரசும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” என வார்த்தைக்கு வார்த்தை வறுத்தெடுக்கும் இடதுசாரிகள் குஜராத் மாடலை உற்றுநோக்குவது கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கேரள அரசின் தலைமைச் செயலாளர் வி.பி. ஜாய், குஜராத்தில் முகாமிட்டு அங்கு செயல்படுத்தப்படும் சி.எம் டாஸ்போர்டு உள்ளிட்ட திட்டங்களை பார்வையிட்டு திரும்பியுள்ளதே இந்த விவாதத்துக்கு முக்கிய காரணம்.

பூபேந்திர படேல்
பூபேந்திர படேல்

குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் இல்லத்தில் அம்மாநிலத்தின் நிகழ்நேரத் தரவுகளை உடனுக்குடன் காட்டும் சி.எம் டேஸ்போர்டு என்னும் முறை அமைக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து வகையான பொதுச் சேவைகளையும் முதல்வர் தானே கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை நேரில் சென்று கேரள அரசின் தலைமை செயலாளர் வி.பி.ஜாய் பார்வையிட்டார். அவரோடு கேரள அரசின் உயர் அதிகாரிகள் குழுவும் சென்றது. இதுமட்டுமின்றி, மாநிலம் முழுவதிலும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளின் செயல்திறனைக் கண்காணிக்கும் வித்யா சமிக்‌ஷ கேந்திரம் என்னும் அமைப்பையும் இந்தக் குழு பார்வையிட்டுத் திரும்பி இருக்கிறது.

“மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மதிப்பீடு செய்யும் வகையில் குஜராத்தில் பின்பற்றப்படும் ‘சி.எம். டேஸ்போர்டு’ திட்டத்தை ஒருமுறை சென்று பார்க்கவேண்டும்” என பிரதமர் நரேந்திரமோடி சொன்னதன் பேரிலேயே குஜராத் சென்று பார்வையிட்டதாக தலைமை செயலாளர் ஜாய் தெரிவித்துள்ளார். இந்த சி.எம் டேஸ்போர்டின் வழியே கரோனா காலத்தில் மருத்துவமனையில் காலி படுக்கைகள், ஆக்சிஜன் இருப்பு மட்டுமல்லாது குக்கிராமங்களில் நிலவும் தெருவிளக்குப் பிரச்னைகளையும் முதல்வர் கண்காணிக்க முடியும். எந்த அதிகாரியையும் இந்த செயலியின் மூலம் தொடர்புகொள்ளவும் முடியும். இதை கேரளத்திலும் செயல்படுத்த ஆர்வமாக இருப்பதாக தலைமை செயலாளர் ஜாய் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த செயலியை வழங்க குஜராத்தும் சம்மதம் தெரிவித்துள்ளது.

ஆனால், கேரளத்தில் எதிர்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் இதையே மையமாக வைத்து பினராயி விஜயனை வெளுத்துவாங்குகின்றன.

சுதாகரன்
சுதாகரன்

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், “கேரள இடதுசாரி அரசு, பாஜகவுடன் தனது உறவைப் பலப்படுத்திக்கொள்ள விரும்புவதையே இதுகாட்டுகிறது. குஜராத்தை காப்பி அடித்து, அவர்களின் திட்டத்தை இங்கு கொண்டுவர முயல்கிறார்கள். மோடியின், ஒரேநாடு கொள்கையையும் ஆதரித்துவிடுவார்களோ என்னும் சந்தேகம் வருகிறது’’ எனச் சாடியிருக்கிறார்.

பாஜகவினரோ, தங்களின் சமூகவலைதளப் பக்கங்களில், ‘கேரள அரசு குஜராத்தை மாடலாக நினைப்பதை வரவேற்கிறோம். அதேநேரம் கேரளத்தைவிட, குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு. அதையும் பின்பற்றவேண்டும்’ என தனி ரூட்டில் தாக்குகின்றனர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in