திமுக - பாஜக இடையே ஏன் இந்த திடீர் பாசம்?

இணக்கம் காட்டும் எதிரெதிர் துருவங்கள்!
திமுக - பாஜக இடையே ஏன் இந்த திடீர் பாசம்?
மோடியுடன் ஸ்டாலின்

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைவிட பாஜகதான், திமுக அரசை அதிகமாக விமர்சித்துவருகிறது என்று சமீபகாலமாகப் பேச்சு உருவாகியிருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார். ஆனால், அவரைத் தவிர பாஜக தலைவர்கள் யாரும் திமுக அரசு மீது எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைப்பதில்லை. எச்.ராஜாகூட அடக்கிவாசிக்கிறார் என்பதே நிதர்சனம். பதிலுக்கு திமுகவும் பாஜக விஷயத்தில் அதிகம் முரண்டுபிடிப்பதில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அடிக்கடி விசிட் அடித்து திமுக அரசை காட்டமாக விமர்சித்துச் சென்ற பாஜக மேலிடப் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்களின் வருகையும் தற்போது மட்டுப்பட்டிருக்கிறது. அதேபோல, மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்துவந்த திமுக அமைச்சர்களும்கூட அதையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டார்கள்.

என்ன நடக்கிறது தமிழக அரசியல் களத்தில்?

பிரதமரும், முதல்வரும்
பிரதமரும், முதல்வரும்

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததற்கு மத்திய அரசின் வழிகாட்டுதல்தான் காரணம் என்று சொல்லிவந்தது தமிழக அரசு. ஆனால் தமிழக பாஜகவோ, கோயில்களில் எல்லா நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. அடுத்த இரண்டொரு நாளில் அனைத்து நாட்களிலும் கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கியது தமிழக அரசு. இதைத் தங்களின் வெற்றியாகக் கொண்டாடிவருகிறது பாஜக.

ஆளுநரைச் சந்தித்த போது...
ஆளுநரைச் சந்தித்த போது...

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து புகார் அளித்தார் என்றார்கள். ஆனால், மறுநாளே தன்னைச் சந்திக்க ஸ்டாலினுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தார் ஆளுநர். நீட் எதிர்ப்பு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று அந்தச் சந்திப்பின்போது ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் கோயில்கள் திறப்பு குறித்து ஸ்டாலினிடம் கடுமைகாட்டினார் என்று பாஜகவினர் தகவல் பரப்பினர். இதுபோன்ற பல தகவல்கள் அநாவசியமாகப் பரவிவருவதால், போலியான பக்கங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று உடனடியாக ஆளுநர் அலுவலகம் அறிவித்தது.

புதிய ஆளுநரை வரவேற்க, முதல்வர் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றாலும் விமான நிலையம் சென்று வரவேற்றார் முதல்வர். அப்போதே, ஆளுநரை வைத்து தமிழக அரசை ஆட்டிவைக்கப் போகிறது மத்திய அரசு என்றார்கள் பாஜக ஆதரவாளர்கள். ஆனால் ஆளுநரோ, மகாபலிபுரம், ஊட்டி என அலட்டிக்கொள்ளாமல் பொழுதைக் கழித்தார். அண்மையில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தபோதும்கூட, திமுக அரசுக்கு எதிராகப் பெரிதாக எந்தக் குற்றச்சாட்டையும் ஆளுநர் வைக்கவில்லை என்று தான் சொல்கிறார்கள்.

அண்ணாமலை ஆர்ப்பாட்டம்...
அண்ணாமலை ஆர்ப்பாட்டம்...

அண்மையில் தமிழகத்தில் யூரியாவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இவ்விஷயத்தில் முதல்வர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, 90 ஆயிரம் டன் யூரியாவைத் தமிழகத்துக்கு உனடியாக ஒதுக்கியது மத்திய அரசு.

பிரதமர் அலுவலகச் செயலாளராக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐஏஏஸ்-ஐ, தமிழகப் பணிக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு கேட்டதுமே, மறுப்புச் சொல்லாமல் அவரை விடுவித்தது மத்திய அரசு. தமிழகத்துக்குப் போதுமான தடுப்பூசி தருவதில்லை, மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது என்று ஆரம்பத்தில் கடுமையாக விமர்சித்தார்கள் திமுக அமைச்சர்கள். தற்போது தமிழகம் கேட்ட அளவுக்குத் தடுப்பூசி கொடுக்கப்பட்டு, நாட்டிலேயே அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் விளங்குகிறது.

மத்திய அரசையும் நிதித் துறையையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக, 8 பேர் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடமளித்தது மத்திய அரசு. அதன் பிறகு, சென்னைக்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தியாகராஜன்.

நாடாளுமன்ற நிலைக்குழுக்களிலும் பெரும்பான்மையான திமுக உறுப்பினர்களுக்கும் இடமளிக்கப்பட்டிருக்கிறது. இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், ‘இரு தரப்பும் இணக்கமாகச் செல்வதற்கான சமிக்ஞை’ என இதையும் சிலர் எடுத்துக் கோக்கிறார்கள்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
மோடியுடன் ஸ்டாலின்
மோடியுடன் ஸ்டாலின்

மாநில அரசு கேட்பவை அனைத்தையும், மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித் தரும் நிலையில் அதற்குப் பிரதியுபகாரமாக பாஜகவைக் கடுமையாக வசைபாடுவதைக் குறைத்துக்கொண்டுவிட்டது திமுக. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், வந்த பின்னரும் வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு ஆகியவற்றை முன்வைத்து மத்திய அரசை மிகக் கடுமையாக எதிர்த்துவந்த திமுக, தற்போது சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்ததோடு அமைதியாகிவிட்டது.

பாஜகவைப் பொதுவெளியில் விமர்சித்துவந்த திமுக தலைவர்கள், தற்போது வாயே திறப்பதில்லை. முதலில் சொன்னதுபோல், பாஜக தரப்பிலும் அண்ணாமலையைத் தவிர வேறு யாரும் திமுகவை விமர்சிப்பதில்லை. இந்தப் போக்குகளைத் தொடர்ந்துதான், கருத்தியல் ரீதியில் முற்றிலும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் திமுகவும் பாஜகவும் நெருங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதேநேரத்தில், “ஆளுநர் அமைதியாக இருக்கிறார் என்றால் அது அவர் தமிழ்நாட்டின் அரசியலையும், மக்களின் மனவோட்டத்தையும் மிகத் தீவிரமாக உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்” என்று சிலர் வாதிடுகின்றனர். “டெல்லி சென்றுவிட்டு வந்த பின்னர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் கலந்தாலோசிக்க இருப்பதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆளுநருக்கு அனுப்ப, மாவட்ட ஆட்சியர்களிடம் தமிழக தலைமைச் செயலர் அறிக்கை கேட்டிருப்பதையும் உற்று கவனிக்க வேண்டும். இவையெல்லாம் ஆளுநர் தனக்கு இடப்பட்ட பணியை செய்யத் தொடங்குகிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது” என்கிறார்கள் அவர்கள்.

ஏ.கே.எஸ்.விஜயன்
ஏ.கே.எஸ்.விஜயன்

இதுகுறித்து தமிழக அரசின் டெல்லிக்கான சிறப்புப் பிரிதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனிடம் பேசினோம்.

“ஒன்றிய அரசும், மாநில அரசும் தங்களுக்குரிய பொறுப்புக்களையும், அதிகாரங்களையும் உணர்ந்து நடந்துகொள்ளும்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. ஒன்றிய அரசின் நிலைக்குழுக்களில் அனைத்துக் கட்சிகளின் எம்பி-க்களுக்கும் இடமளிக்கப்படுவது வழக்கம்தான். நானே அப்படிப் பல்வேறு குழுக்களில் தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். அப்படித்தான் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவினர் இப்போது நிலைக்குழுக்களில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதனால் பாஜக பக்கம் திமுக சாய்ந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. திமுகவின் கொள்கைகள் மற்றும் தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் ஒருபோதும் தமிழக முதல்வரும், திமுகவும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டார்கள்” என்றார் அவர்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியோ, “தமிழ்நாட்டுக்கு அதிகத் திட்டங்கள், அதிக நிதி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது உண்மைதான். எந்த ஒரு மாநில அரசு திட்டங்களை வேகமாகச் செயல்படுத்துகிறதோ, அந்த மாநிலத்திற்குத் திட்டங்களை அளிப்பது மத்திய அரசின் வழக்கம். மத்திய அரசுக்கு இந்த அரசாங்கம், அந்த அரசாங்கம் என்பதெல்லாம் கிடையாது. மாநிலங்களுக்குத் தேவையான திட்டங்களையும், நிதியையும் ஒதுக்கீடு செய்வதுதான் அதன் கடமை. மற்றபடி அதற்கு இணக்கமோ, சுணக்கமோ காரணமில்லை” என்கிறார்.

எது எப்படியோ, கொள்கை வேறுபாடுகள், மனமாச்சரியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுவது மக்களுக்கும் நன்மைதானே!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in