5 நாட்களாக பரபரப்பு... ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி சோதனை நிறைவு

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது. இந்தச் சூழலில் ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஒருசில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றது. இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தொழில்நுட்ப தடயவியல் ஆய்வை வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்தநிலையில், டெல்லியில் இருந்து வருமான வரித்துறை ஆணையர் சுனில் குப்தா சென்னை வந்து சோதனையில் ஈடுபட்டார். ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் இளமாறன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் இருந்து 4 பெட்டிகளில் முக்கிய ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டது. இதனிடையே, கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இன்று மாலை நிறைவடைந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in