திருமாவளவன் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி அளித்த புகார்: உயர்நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் புதுத் தகவல்

திருமாவளவன் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி அளித்த புகார்: உயர்நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் புதுத் தகவல்

நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி அளித்த புகார் மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மதுரையை சேர்ந்த பி.ராமசாமி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் நவம்பர் 6-ம் தேதி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் தொகுதி எம்.பி.-யும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மதத்திற்கு எதிரான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகவும், இதன்மூலம் நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடராக விசிக தலைவர் திருமாவளவன் மீது நவம்பர் 6-ம் தேதியே சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி-யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், மனுதாரர் அளித்த புகார் மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் மதுரை காவல் ஆணையரை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.

இதையடுத்து மதுரை காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் ராமசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in