யாரையோ காப்பாற்ற முயற்சி என புகார்: முன்னாள் எம்.பி மஸ்தான் கொலைவழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை

 யாரையோ காப்பாற்ற முயற்சி என புகார்: முன்னாள் எம்.பி மஸ்தான் கொலைவழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மஸ்தானின் தம்பி மனைவி ஜீனத்பேகம் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

கடந்த 22-ம் தேதி ஊரப்பாக்கம் வழியாக காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் எம்பி மஸ்தான் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் மஸ்தான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கூடுவாஞ்சேரி போலீஸார் இதை கொலை வழக்க்காகப்பதிவு செய்து விசாரணை நடத்தி மஸ்தானின் மருமகன் இம்ரான், தமீம், நசீர்,தலகீத் அஹ்மது, லோகேஷ்வரன் ஆகியோரை கைது செய்தனர். மஸ்தானின் தம்பி மருமகன் இம்ரான், மஸ்தானிடம் இருந்து கடனாக 15 லட்சம் ரூபாய் வாங்கியதும், அந்த பணத்தை திருப்பி மஸ்தான் கேட்டதால் ஆத்திரமடைந்த இம்ரான் தனது நண்பர்களை வைத்து கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் சொத்து தகராறில் மருமகன் இம்ரானை வைத்து மஸ்தானை கொலை செய்ததாக மஸ்தானின் தம்பி ஆசம்பாஷாவை கூடுவாஞ்சேரி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இச்சூழலில் மஸ்தான் மரணத்திற்கும், எனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறி மஸ்தானின் தம்பி மனைவி ஜீனத் பேகம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவருடன் வந்த தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், " முன்னாள் எம்.பி மஸ்தான் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில், யாரையோ காப்பாற்றுவதற்காக தமிழக அரசு வழக்கை திசைதிருப்ப முயற்சி செய்கிறது. குறிப்பாக கொலைவழக்கு போன்று இந்த வழக்கை விசாரிக்காமல் கைது செய்து உள்ள ஆசம்பாட்ஷாவின் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்து, ஏதோ ஒரு ஆவணங்கள் தொடர்பாக வீட்டில் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகிறது.

சாதிக் பாஷா மரணமடைந்த விவகாரம் இன்று வரை மர்மம் நீடித்து வரும் நிலையில், இது போன்றதொரு வழக்காக மஸ்தான் கொலை வழக்கு மாறியுள்ளது. எனவே, மஸ்தான் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என டிஜிபியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in