அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியா?- அதிரடி முடிவெடுத்த ஓபிஎஸ் தரப்பு

ஓபிஎஸ்
ஓபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியா?- அதிரடி முடிவெடுத்த ஓபிஎஸ் தரப்பு
Updated on
1 min read

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக வெளியான தகவலுக்கு ஓபிஎஸ் தரப்பில் அதிரடியாக பதில் அளித்துள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. வரும் 27-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய வரும் 19-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு பரிசீலனை வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெறும் தேதி 21 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட கால அட்டவணைப்படி தலைமை கழகத்தில் கட்டணத் தொகை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்பம் மனுக்களை பெற்று கழக சட்டவிதி விதிமுறைகளை பின்பற்றி தங்களுடைய விருப்பம் மனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்று தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதனும் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக மனுத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஸ்பாபு முன்பு நாளை காலை விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், "அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும். அதிமுகவில் தேர்தல் நடத்துவதற்கு என சட்ட விதிகள் உள்ளன" என்றார்.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் தரப்பில் போட்டியிட போவதாக தகவல் வெளியானது. இதனை ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மறுத்துள்ளார். "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பு பதவிகள் தொடர வேண்டும் என்பதே எங்கள் முடிவு. நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். பொதுச்செயலாளர் தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடுவதாக வெளியான செய்தி தவறு. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in