திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிடுவதா?: சீமானை விளாசும் ஜெயக்குமார்

 திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிடுவதா?: சீமானை விளாசும் ஜெயக்குமார்

திராவிடத்தை எருமைமாட்டுடன் தொடர்புபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீமான் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, " கருப்பா இருந்தால் திராவிடர் என்று பொருளா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதற்காக அது திராவிடரா? உழைக்கும் மக்களின் நிறம் கருப்பாகத் தான் இருக்கும்" என்று சீமான் கூறினார்.

இவரின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஜெயக்குமார் பேசுகையில், " எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதற்காக எருமை மாட்டு திராவிடராகி விடுமா என்று சீமான் கேட்கிறார். இது திராவிடத்தை இழிவுபடுத்தும் கருத்தாகும். பகுத்தறிவு உள்ளவர்கள் இதனை ஏற்கமாட்டார்கள். அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிட்டு பேசும் சீமானுக்கு எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "ஆளுநர் மீது பழி போடுவதற்காகவே அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டுகிறார். அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை தான் ஆளுநர் பின்பற்ற முடியும். அவருக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால், புறக்கணிக்கக்கூடாது" என்று ஜெயக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in