தலைமை உத்தரவை மதிக்காத திமுக உறுப்பினர்கள்: இந்திய கம்யூனிஸ்ட் பட்டியலின பெண் உறுப்பினருக்கு நடக்கும் அவலம்

பேரூராட்சி அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கலாராணி
பேரூராட்சி அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கலாராணி

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுகவைச் சேர்ந்த புவனேஸ்வரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அந்த இடம் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த கட்சி உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களில் திமுக 12 இடங்களிலும், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. பாஜக, சுயேச்சை ஆகியோர் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றிருந்தார்கள்.

திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட வகையில் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியை சேர்ந்த ஒரே உறுப்பினரான கலாராணி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் தேர்தல் நடைபெற்ற நாள் அன்று அவருக்கு யாரும் முன்மொழிய வரவில்லை. அவருக்கு பதிலாக திமுகவைச் சேர்ந்த 3-வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

இந்த நிலையில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடங்களை திமுகவினரே எடுத்துக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்த நிலையில் அந்த இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் பதவியை ராஜினாமா செய்ய கட்சிச் தலைமை உத்தரவிட்டது. அதனையடுத்து புவனேஸ்வரி ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து தலைவர் பதவிக்கு மீண்டும் மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போதும் திமுக உறுப்பினர்கள் யாரும் பேரூராட்சி அலுவலகத்துக்கே வராமல் புறக்கணித்தனர். அதனால் தேர்தல் நடைபெறவில்லை. அதன் பிறகு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது அப்போதும் திமுகவினர் கலாராணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனால் அந்த முறையும் தேர்தல் ரத்தானது.

இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து இன்று காலை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த திமுக உறுப்பினர்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்த புவனேஸ்வரியையே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானார்.

தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் திமுகவினர் தன்னை தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்து விட்டனர் என்று கூறிய கலாராணி பேரூராட்சி அலுவலகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு நல்ல தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திமுக உறுப்பினர்கள் பேரூராட்சியில் இருந்து சென்றுவிட்ட நிலையில் கலாராணி தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருக்கின்றனர்.

இதனால் பேரூராட்சி வளாகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in