`பணியாளர்களும் இல்லை, மருந்தும் இல்லை'- புதுச்சேரியில் மருத்துவமனை குறைபாடுகளை கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

`பணியாளர்களும் இல்லை, மருந்தும் இல்லை'- புதுச்சேரியில் மருத்துவமனை குறைபாடுகளை கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் காணப்படும் குறைபாடுகளை கலைந்து மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி  சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களின் அன்றாட வாழ்வில் உடல் நலன் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதைப் பேணி காக்க ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய மருத்துவமனைகளில் போதிய மருத்துவர், செவிலியர், பணியாளர்கள் பணியில் இல்லை. பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல நோய்களுக்கான மருந்துகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. நோய் பரிசோதனை உபகரணங்கள் பழுதாகி போய்விட்டன.

அரசு மருத்துவமனையில் இருதய நோயை கண்டறியும் ஆஞ்சியோகிராம் செய்யும் கருவி பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. மாநில அரசின் மருத்துவ காப்பீடு திட்டமும் இல்லாமல் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர்.  மேற்கண்ட சுகாதார துறையின் இந்த  சீர்கேடுகளை நீக்கிட மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்  என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு சார்பில் இன்று  காலை  சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள்,  பணியாளர்களை நியமிக்க வேண்டும்,  மருந்து தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,  அரசு மருத்துவமனைகளை சீரமைக்க வேண்டும் என்கிற முழக்கங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.  அத்துடன் சுகாதாரத்துறை  இயக்குநரை சந்தித்து இது குறித்த கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்தனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in