விரைவு நீதிமன்றம்... விறுவிறு விசாரணை!

அதிமுகவினர் மீதான ஊழல் வழக்குகளில் திமுகவின் அடுத்த நகர்வு
விரைவு நீதிமன்றம்... விறுவிறு விசாரணை!
திமுக அரசைக் கண்டித்து எடப்பாடி ஆர்ப்பாட்டம்

இப்படியும் இருக்கமுடியுமா என்று வியக்கும் அளவுக்கு அண்மைக் காலத்தில் தமிழகத்து ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் அத்தனை இணக்கமாக இருந்தார்கள். எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாகவே பார்த்துப் பழகிவிட்ட தமிழக மக்கள், இரண்டு கட்சிகளும் இப்படி நட்புபாராட்டியதைப் பார்த்தும் ஆச்சரியப்பட்டார்கள்.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு தற்போது அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ‘விடியல் அரசு’ என்று தன்னை சொல்லிக்கொள்ளும் திமுக அரசை, ‘விடியா அரசு’ என்று விமர்சிக்கும் அளவுக்குப் போயிருக்கிறார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடியாரின் இந்தக் குமுறலுக்கு அவரது அமைச்சரவைச் சகாக்கள் மீதான அதிரடி ரெய்டுகள்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக, வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி என தனது ஆதரவு வட்டத்தின் மீதே ரெய்டு அஸ்திரத்தை ஏவி வருவது எடப்பாடியாரை ஏகத்துக்கும் சூடாக்கி வருகிறது. ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லி ரெய்டு நடத்துவது ஒருபுறமென்றால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஒரு ரவுடி கணக்காய் சித்தரித்து 8 தனிப்படைகள் கொண்டு அவரை வலைவீசித் தேடுவதையும் எடப்பாடி பழனிசாமியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ராஜேந்திர பாலாஜி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, தனது அமைச்சரவை சகா ஒருவர் திட்டமிட்டுத் துரத்தப்படுவதாகவே பார்க்கிறார் எடப்பாடியார்.

தங்கமணி
தங்கமணி

அந்த எரிச்சலைத்தான், ’’திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பொய் வழக்குப் போடுவது தொடர்கதையாகி வருகிறது” என்று வார்த்தைகளாகக் கொட்டி இருக்கிறார் எடப்பாடியார்.

இணக்கமான போக்கை திமுக கடைபிடித்ததும், தற்போது அதிமுகவினரை விரட்டிப் பழிவாங்கத் தொடங்கியிருப்பதும் உண்மைதான். ஆனால், அரசின் இப்போதைய நடவடிக்கைகளுக்குக் காரணமே அதிமுக தான் என்று சொல்பவர்கள், “மற்றவர்கள் அடக்கி வாசித்தாலும் எடப்பாடி மட்டும் தொடர்ந்து அரசுக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்து வந்தார். அதன் உச்சமாக கடந்த 17-ம் தேதி, திமுக அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது அதிமுக.

மேடை கிடைத்துவிட்டதால் அதிமுகவினரால் சும்மா போக முடியவில்லை. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் அரசுக்கு எதிரான விமர்சனங்களை எடுத்து வீசினார்கள். இனியும் பொறுமையாக இருந்தால் இன்னும் கூடுதலாகப் பேசுவார்கள் என்று தெரிந்ததால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது திமுக. ஆர்ப்பாட்டம் நடந்த நாளிலேயே ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படைகளை அமைத்தது போலீஸ். கூடவே, எடப்பாடிக்கு மிக நெருக்கமான முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிரான அடுத்தகட்ட ரெய்டு நடவடிக்கையும் ஆரம்பமானது” என்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ஆக, நீ சும்மா இருந்தால் நானும் சும்மா இருப்பேன். நீ எசகு பிசகாய் எதாவது பேசினால் நானும் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறது, ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுக.

அதேசமயம், “இந்த ரெய்டு நடவடிக்கைகள் எல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்ததுதானே. இந்த வழக்குகள் எல்லாம் என்னாகும் என்று எங்களுக்குத் தெரியும்; எங்களைவிட திமுகவுக்கு இன்னும் நன்றாகவே தெரியும். இருந்தாலும் ஊழல் வழக்குகள் மூலம் அதிமுகவுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரம் செய்யப் பார்க்கிறது திமுக. ஆனால், அது எடுபடாது” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

திமுகவினரோ, “ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவோம் என்பதும் தேர்தல் சமயத்தில் எங்கள் தளபதி கொடுத்த வாக்குறுதிதான். அப்படிப்பட்டவர் தப்பு செய்தவர்களை தப்பிக்க விடுவாரா? தவறு செய்தவர்களை தண்டிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் மட்டுமே இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

தங்கமணி வீட்டில் ரெய்டின்போது  அதிமுக நிர்வாகிகள்...
தங்கமணி வீட்டில் ரெய்டின்போது அதிமுக நிர்வாகிகள்...

முதல்கட்டமாக முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டுகள் நடத்தி ஆதாரங்களையும் ஆவணங்களையும் திரட்டி இருக்கிறார்கள். இன்னும் சிலர் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வருகிறது. தவறு செய்தவர்கள் அத்தனை பேரும் பாரபட்சமின்றி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஓபிஎஸ்சும் தப்பமுடியாது, ஈபிஎஸ்சும் தப்பமுடியாது.

தங்கமணி வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள்
தங்கமணி வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள்

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் உரிய முறையில் ஆவணங்கள் திரட்டப்பட்டு வழக்கை நடத்தியதால் தான் அவர் தண்டிக்கப்பட்டார். அத்தகைய வலுவுடன் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகிறது போலீஸ். அதனால் தான் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான நகர்வு குறித்தும் அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஊழல் செய்தவர்கள் மீதான வழக்குகளை தனித் தனி நீதிமன்றங்களில் நடத்துவதற்குப் பதிலாக அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் நடத்துவதுதான் அந்தத் திட்டம். இதற்கென விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டமும் அரசின் பார்வையில் இருக்கிறது. அப்படி விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டால், இப்போது உள்ளது போல் வழக்கு விசாரணையை இழுத்தடிக்க முடியாது. தினப்படி விசாரணைகள் நடைபெற்று விரைவாக தீர்ப்புகள் எழுதப்படும். இதனால், தளபதி சொன்னபடி இந்த ஆட்சியிலேயே ஊழல் பேர்வழிகள் சிறைக்குப் போவார்கள்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆர்ப்பாட்டம்

அடுத்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றம் அமைப்பது குறித்த அறிவிப்பை முதலமைச்சரே வெளியிட வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் மீதான திமுக அரசின் ரெய்டு நடவடிக்கைகள் குறித்தும், அதிமுகவினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படலாம் என வரும் செய்திகள் குறித்தும் முன்னாள் அமைச்சரும், நாகை மாவட்ட அதிமுக செயலாளருமான ஓ.எஸ்.மணியனிடம் கேட்டோம்.

‘’எந்த ஒரு பாலிசியும் இல்லாமல் ஆட்சி நடத்துகிறார்கள். அவர்களால் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. அதனால் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதையெல்லாம் திசை திருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைகள் நடத்தப்படுகிறது. சோதனைகளில் இவர்களால் எதையும் எடுத்துச்செல்ல முடியாவிட்டாலும் அதுகுறித்த செய்திகளை மெனக்கிட்டு விரிவாகப் பொதுவெளியில் பரப்புகிறார்கள்.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

அவர்களுடைய நோக்கம் அதிமுக மீது மக்களிடம் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும், திமுக ஆட்சி மீது இருக்கும் வெறுப்பை திசைதிருப்ப வேண்டும். அதே நேரம், விரைவு நீதிமன்றங்கள் அமைத்தாலும் போதிய ஆதாரங்கள் இல்லாத போது வழக்குகளை வைத்துப் பெரிதாக என்ன செய்துவிட முடியும்? எந்த நீதிமன்றமாக இருந்தாலும் சத்தியம் தான் ஜெயிக்கும்” என்றார் அவர்.

மணியன் இப்படிச் சொன்னாலும், அடுத்து நாமாக இருக்குமோ என்ற அச்சத்தில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!

Related Stories

No stories found.