தமிழச்சி கேட்ட அப்பாலஜி... சத்தமின்றி சாபமிட்ட காங்கிரஸ்!

தமிழச்சி கேட்ட அப்பாலஜி... சத்தமின்றி சாபமிட்ட காங்கிரஸ்!

‘‘வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் ஆளுமையுடன் விருந்து சாப்பிட விரும்புவதாக இருந்தால், அது யாராக இருக்கும்?’’

‘‘மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன்’’

‘‘பிரபாகரனை சந்தித்திருந்தால், என்ன கேட்டிருப்பீர்கள்?’’

‘‘முள்ளிவாய்க்கால் துயர நிகழ்வுக்காக மன்னிப்புக் கோரியிருப்பேன்.’’

- இப்படிச் சொன்னது யாராக இருக்கும்? மேதகு இந்திய நாடாளுமன்ற மக்களவையின் தென்சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளையொட்டி இணையதள நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில்தான் இப்படிச் சொல்லி இருக்கிறார் அவர்.

இலங்கையில் கடந்த 2009-ல் உள்நாட்டு போர் தீவிரமடைந்தது. இதைக் கண்டித்து தமிழகத்திலும் பொது வேலைநிறுத்தம், மனிதச்சங்கிலி, பேரணி என போராட்டங்கள் தீவிரமாகின. அந்த சமயத்தில் ஏப்ரல் 27-ம் தேதி அதிகாலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு திடீரென வந்த முதல்வர் கருணாநிதி, இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தார்.

சில மணி நேரங்கள் உண்ணாவிரதம் நீடித்த நிலையில், ‘‘போரை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசு முடிவுசெய்துள்ளதாக மகிழ்ச்சிகரமான செய்தி வந்திருக்கிறது. எனவே, உண்ணாநோன்பை முடித்துக் கொள்கிறேன்’’ என்று பிற்பகலில் அறிவித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார் கருணாநிதி.

‘‘இது கருணாநிதியின் உச்சகட்ட நாடகம். தன் குடும்பத்துக்காக காங்கிரசுடன் சேர்ந்துகொண்டு தமிழினத்துக்கு துரோகம் இழைத்துவிட்டார்’’ என்று, இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அப்போது இதைக் கடுமையாக விமர்சித்தனர்.

அதேசமயம், இலங்கையிலும் போர் தீவிரமடைந்தது. முல்லைத் தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக அறிவித்த இலங்கை ராணுவம், அத்துடன் போர் முடிவுக்கு வந்ததாக 2019 மே 18-ம் தேதி அறிவித்தது.

இந்த நிலையில்தான் தற்போது, ‘‘முள்ளிவாய்க்கால் துயர நிகழ்வுக்காக பிரபாகரனிடம் மன்னிப்புக் கேட்டிருப்பேன்’’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன். இது காங்கிரஸார் மத்தியில் கடும் எரிச்சலையும் எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. “இனியும் அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டுமா என்பதை காங்கிரஸ் கட்சி யோசிக்க வேண்டும்” என பாஜகவும் சைஸாகக் கிண்டிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறது.

‘‘முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு திமுகதான் காரணம் என தமிழச்சி தங்கபாண்டியன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் இனியாவது வெளியேறுமா?’’ என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதைக்கூட, எதிர்க்கட்சியின் நப்பாசை என கருதலாம்.

ஆனால், காங்கிரசிலேயே தமிழச்சியின் அப்பாலஜிக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. ‘‘முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு இவர் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்த நிகழ்வுக்குக் காரணம் திமுகதான் என்ற ஒப்புதல் வாக்குமூலமே இது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ? இப்போதுகூட காங்கிரஸ் தலைவர்களுக்கு ரோஷம் வரவில்லை என்றால் வெட்கக்கேடு’’ என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ரோஷப்பட்டிருக்கிறார்.

‘‘பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை உண்மையான காங்கிரஸார் விரும்ப மாட்டார்கள். கொலைக் குற்றவாளியை ஹீரோ ஆக்காதீர்கள்’’ என்று காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் கண்டித்துள்ளார். (இவரது தந்தையார் ப.சிதம்பரம் தான் கருணாநிதியுடன் சேர்ந்து அன்றைய தினம் இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக இங்கே பிரசங்கம் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது!)

ஒருவேளை, நிர்வாகிகளின் ‘எக்ஸ்’ வலைதள பதிவுகள், தொண்டர்களின் ‘மீம்ஸ்’கள் இன்னும் ஓரிரு நாட்கள் நீடித்திருந்தால், ‘‘இது அவரது தனிப்பட்ட கருத்து’’ என்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் அறிக்கை மூலம் விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும். ஆனால், அதற்குக்கூட வாய்ப்புத் தராமல், சாமர்த்தியமாக போராட்டத்தை குஷ்பு வீட்டுப் பக்கம் நகர்த்திக் கொண்டுபோய்விட்டது காங்கிரஸ் தலைமை!

என்ன இருந்தாலும் கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கே... தேர்தல் நெருங்குற நேரத்துல அதெல்லாமும் அவங்க கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா..!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in