‘பெயர் மாறலை… பெயின்டிங் கான்ட்ராக்ட் கேன்சல்!’ படக்கென முடிவெடுத்த எடப்பாடி

கற்பனை கலாட்டா
‘பெயர் மாறலை… பெயின்டிங் கான்ட்ராக்ட் கேன்சல்!’
படக்கென முடிவெடுத்த எடப்பாடி

அவ்வை சண்முகம் சாலையில் அமைந்திருக்கும் அதிமுக அலுவலகம் ஆழ்ந்த குழப்பம் ப்ளஸ் அளவற்ற மகிழ்ச்சி என இரு வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டிருந்தது. இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என மாற்றப்போவதாக ‘மேலிடத்திலிருந்து’ வந்த தகவலையடுத்து ஏசியன் பெயின்ட் டப்பா சகிதம் பெயின்டிங் கான்ட்ராக்டர் தேசமணியை வரவழைத்திருந்தனர் அகில இந்திய(?) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்.

‘ஆர்டர்’ உறுதியானதும், கட்சியின் பெயரை மாநிலம் முழுவதும் ‘அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என மாற்றி எழுத வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்பேரில் அவர் அங்கேயே தங்கவைக்கப்பட்டிருந்தார்.

‘பாரத விலாஸ்’ படத்தில் இடம்பெற்ற, ‘இந்திய நாடு என் வீடு… இந்தியன் என்பது என் பேரு’ பாடலை யூடியூபில் பார்த்துக்கொண்டிருந்த திரையிசை ரசிகர் ஜெயக்குமார், “கான்ஸ்டிடியூஷன்ல சொல்லிருக்கிற மாதிரி ரெண்டு வார்த்தையையும் யூஸ் பண்ணிருக்காங்க பாரு அப்பவே” என்று அருகில் இருந்த அதிமுக தொண்டர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

‘காமர்ஸ் டியூஷன்ல பாட்டெல்லாம் வருமா?’ என்ற குழப்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் குத்துமதிப்பாகத் தலையாட்டி ரசித்துக்கொண்டிருந்தார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். செல்லூர் ராஜூ செல்போனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“மோடிஜி ஆட்சியில மும்மாரி மழை பொழிஞ்சாலும் விடியா திமுக அரசு அந்தத் தண்ணியை எல்லாம் வெட்டியா வீணாக்குது... அம்மா காலத்துல கட்டுக்கோப்பா இருந்த அதிமுக நிர்வாகிகளே(!) கொலைக் குற்றத்துல இறங்குற அளவுக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை இன்னைக்குச் சந்தி சிரிக்குது” என்று பிரஸ் மீட்டில் பின்னியெடுப்பதற்குப் புதுப்புதுப் பாயின்ட்ஸை எடுத்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

ஜாலி மூடில் இருந்த ஜெயக்குமார், எடப்பாடி அருகில் சென்று, “பார்த்தீங்களா தலைவரே! ஓபிஎஸ்ஸோட புரட்சிப் பயண மீட்டிங்ல ஒதுங்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு ஒரேதா மழை பெஞ்சிருக்கு. தண்ணீர் தேங்குன மைதானத்தைப் பார்த்து பன்னீர்செல்வம் கண்ணீர் விடாத குறை… நமக்கு எதிரா யார் வந்தாலும் இயற்கையே அவங்களை என்னான்னு கேட்டுடுது… இல்ல?” என்று குதூகலிக்க, கோடைவாசஸ்தல விவகாரம்(!) மனதில் நிழலாட கொஞ்ச நேரம் அமைதி காத்தார் எடப்பாடி. பின்னர், “பெயர் மாத்துற மேட்டரு பாதியிலேயே நிக்கிதுன்னு தகவல் வருது. பெயின்டிங் கான்ட்ராக்ட்டை கேன்சல் பண்ணிடுங்க” என்று அடக்கமான குரலில் ஆணையிட்டார்.

அதற்குள் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.

“மோடி அரசு என்ன அறிவிச்சாலும் முதல் ஆளா முழுமூச்சா ஆதரிக்கிறீங்களே... ஒரு பேச்சுக்கு ஒண்ணு ரெண்டையாவது எதிர்த்துப் பார்க்கலாமே?” என்று ஒருவர் ஆரம்பிவைக்க…

“அப்படியெல்லாம் பொத்தாம்பொதுவா பேசிடாதீக. எங்க ஆட்சிக்காலத்துல ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’னு பேச்சு வந்தப்ப உறுதியா எதிர்த்தோம். சட்ட ஆணையத்துக்குக் கட் அண்ட் ரைட்டா கடிதம் எழுதினோம். ஊடக நண்பர்கள் இந்த உண்மையை மறந்துடக் கூடாது” என்று இடித்துரைத்தார் எடப்பாடி.

“உங்க ஆட்சியை காப்பாத்திக்க மட்டும் உடனடியா ரியாக்ட் பண்ணினீங்க. திமுக ஆட்சின்னா மட்டும் திடுதிப்புன்னு கலைக்க அனுமதிக்கலாமான்னு கேட்டு பங்கம் பண்றாங்களே?” என்று அடுத்த கேள்வி வந்தது.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி, “எலெக்‌ஷன் எலெக்‌ஷன்னு எக்கச்சக்கமா செலவாகுதுன்னுதான் சென்ட்ரல் கவர்ன்மென்ட் சொல்லுதுல்ல. அவங்க எதையும் கணக்குப் போட்டுப் பார்க்காம சொல்ல மாட்டாங்க” என்று சொல்ல, “சில சமயம் எலெக்‌ஷனுக்கு அப்புறமும் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை ஏலம் எடுக்கிறதுக்கு அவங்க இன்னும் எவ்ளோ செலவு பண்ண வேண்டியிருக்கு தெரியுமா?” என்று பேசத் தொடங்கிய செல்லூர் ராஜூவைச் சிரமப்பட்டு அடக்கினார்கள் அதிமுகவினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in