கன்னியாகுமரி திமுக மீது மட்டும் ஏன் இத்தனை கரிசனம்?

சுரேஷ் ராஜன்
சுரேஷ் ராஜன்

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் மட்டுமல்ல... சின்னஞ் சிறிய மாவட்டங்களில் ஒன்றுமான கன்னியாகுமரிக்கு மட்டுமே 14 மாநில நிர்வாகிகள் பதவிகளை வாரி வழங்கி இருக்கிறது திமுக தலைமை. எதிரெதிர் கோஷ்டிகளுக்கும் பாரபட்சமில்லாமல் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த குமரி மாவட்ட திமுகவே குதூகலத்தில் இருக்கிறது.

சுரேஷ் ராஜன் வரவேற்பில்...
சுரேஷ் ராஜன் வரவேற்பில்...

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக நாகர்கோவில் மேயர் மகேஷும், மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் மனோ தங்கராஜூம் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கூட்டணி போட்டுக் கொண்டு முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை ஓரங்கட்டி வைத்திருந்தார்கள்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தியிடம் தோற்றுப் போனார் சுரேஷ் ராஜன். இதனால், புதியவரான மனோ தங்கராஜுக்கு அமைச்சர் யோகம் அடித்தது. இந்நிலையில், நாகர்கோவில் மாநரகராட்சி மேயர் தேர்தலில் சுரேஷ் ராஜன் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக பழிபோட்டது மகேஷ் தரப்பு. இதனால் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து சுரேஷ் ராஜனை கழற்றிவிட்ட திமுக தலைமை, அந்தப் பொறுப்பை மேயர் மகேஷுக்குக் கொடுத்தது.

இதன் பிறகு, மனோ தங்கராஜ் - மகேஷ் பிணைப்பு இன்னும் அதிகமாகிப் போனது. இவர்களது ஆதரவாளர்கள் அடிக்கும் போஸ்டர்களில் திட்டமிட்டு சுரேஷ் ராஜனின் பெயரும் படமும் தவிர்க்கப்பட்டது. திமுக மேடைகளில் சுரேஷ் ராஜனுக்கு இருக்கைகூட கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். இதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தொண்டரோடு தொண்டராய் உட்கார ஆரம்பித்தார் சுரேஷ் ராஜன். இந்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ-வான ஆஸ்டினும் மகேஷ் கூட்டணியில் சேர்ந்து கொண்டு சுரேஷ் ராஜனை மேலும் சூடேற்றினார்.

ஹெலன் டேவிட்சனை வரவேற்கும் மனோ தங்கராஜ், மகேஷ்
ஹெலன் டேவிட்சனை வரவேற்கும் மனோ தங்கராஜ், மகேஷ்

சமீபத்தில் முட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற மீனவர் தினவிழா நடந்தது. இதிலும் மேடையில் சுரேஷ் ராஜனுக்கு இருக்கை இல்லை. போஸ்டர்களிலும் சுரேஷ் ராஜன் படம் இல்லை. மேயர் மகேஷும், மனோ தங்கராஜூம் அவை நாகரிகம் கருதிக்கூட சுரேஷ் ராஜன் பெயரை மேடையில் உச்சரிக்கவில்லை. ஆனால் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனும், உதயநிதியும் “அண்ணன் சுரேஷ் ராஜன்” என்று விளித்து மனோ தங்கராஜ் - மகேஷ் கூட்டணியை முழிக்க வைத்தார்கள்.

திமுகவில் அழகிரி - ஸ்டாலின் யுத்தம் உச்சத்தில் இருந்த போது தெற்கில் ஸ்டாலினுக்கு ஆதரவாக நின்றவர் சுரேஷ் ராஜன். அதனால், ஸ்டாலின் குடும்பத்துக்கே அவர் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு என்று சொல்வார்கள். துர்கா ஸ்டாலினின் ஆன்மிக யாத்திரைகளின் போது சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி தான் அவருக்குத் துணையாகச் செல்வார். அப்படி எல்லாம், ஸ்டாலினிடம் தனக்கு இருந்த நெருக்கத்தை மனோ - மகேஷ் கூட்டணி குலைத்துவிட்டதே என்ற வருத்தம் சுரேஷ் ராஜனுக்கு உண்டு.

இதனால் திமுக மீது பிடிப்பில்லாமல் இருந்த சுரேஷ் ராஜன், உட்கட்சித் தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கினார். இதைத்தான் மனோ - மகேஷ் கூட்டணியும் எதிர்பார்த்தது. சுரேஷ் ராஜன் களத்துக்கு வராததால் மாவட்டத்தில் பெரும்பாலான பதவிகளை இந்த இருவர் கூட்டணியே கைப்பற்றியது. இந்த நிலையில், சுரேஷ் ராஜனின் வாட்டத்தைப் போக்கும் விதமாக அவரை திமுக தணிக்கைக் குழு உறுப்பினராக்கி இருக்கிறது திமுக. அப்படி ஒன்றும் அதிகாரமிக்க பதவி இல்லை என்றாலும் மாநிலப் பொறுப்பு என்பதால் சுரேஷ் ராஜன் கோஷ்டி மீண்டும் சுறுசுறுப்பாகி இருக்கிறது.

தணிக்கைக் குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் ராஜனுக்கு வடசேரி பகுதியில் வைத்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்புக் கொடுத்து அசத்தினார்கள். மறந்தும் இந்த நிகழ்வில் எதிர்கோஷ்டியினர் யாரும் தலைகாட்டவில்லை.

வீடு தேடிச் சென்று  வாழ்த்து...
வீடு தேடிச் சென்று வாழ்த்து...

இந்த பரபரப்புகளுக்கு நடுவே, மாநில மகளிரணி செயலாளராக அறிவிக்கப்பட்ட ஹெலன் டேவிட்சனை தங்கள் பக்கம் இழுக்க மனோ - மகேஷ் கூட்டணியும், சுரேஷ் ராஜன் கோஷ்டியும் போட்டி போட்ட நிகழ்வுகளும் நடந்தேறின. ஹெலனின் கணவரும், குமரி மாவட்ட வணிகர் சங்கத் தலைவருமான டேவிட்சன், மேயர் மகேஷுக்கு எதிராக மாவட்டச் செயலாளர் ரேஸில் தனி அணி திரட்டினார். ஆனால், மகேஷ் அந்த டீமை உடைத்ததால் ஒரு கட்டத்துக்கு மேல் டேவிட்சனால் முன்னேற முடியவில்லை. இதில் ஹெலனுக்கும் மகேஷ் மீது வருத்தங்கள் உண்டு.

எனினும், மாநில மகளிரணி செயலாளராக அறிவிக்கப்பட்ட ஹெலனுக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மனோ தங்கராஜூம், மேயர் மகேஷூம் சேர்ந்தே வரவேற்புக் கொடுத்தனர். சுரேஷ்ராஜனோ ஹெலன் டேவிட்சனின் வீட்டுக்கே போய் அவருக்கு பொன்னாடை போர்த்தினார். சுரேஷ் ராஜனுக்கு நடந்த வரவேற்பு விழாவில் ஹெலனின் கணவர் டேவிட்சன் கலந்து கொண்டதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

சுரேஷ் ராஜனை முன்னிலைப்படுத்தியதோடு விடாமல் அவருக்கு எதிராக அரசியல் செய்யும் ஆஸ்டினுக்கும் மாநில இணை அமைப்புச் செயலாளர் பதவியைத் தந்து பேலன்ஸ் செய்திருக்கிறது திமுக தலைமை. கட்சிகள் பல மாறி வந்த ஆஸ்டினை திமுகவுக்கு அழைத்து வந்ததே சுரேஷ்ராஜன் தான் என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஸ்டாலினுடன் ஜோசப் ஸ்டாலின்...
ஸ்டாலினுடன் ஜோசப் ஸ்டாலின்...

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து திமுகவுக்குத் திரும்பிய ஜோசப் ஸ்டாலினுக்கும் உதயநிதியின் கருணையால் மாநில மீனவரணி செயலாளர் பதவி கிடைத்திருக்கிறது. இந்தப் பொறுப்பை எதிர்பார்த்துக் காத்திந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பசலியானுக்கு மீனவரணி மாநில துணைச் செயலாளர் பதவியும், முன்னாள் எம்எல்ஏ-வும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான இரா.பெர்னார்டுக்கு மீனவரணியின் மாநில தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், இதே மாவட்டத்தைச் சேர்ந்த தாமரை பாரதிக்கு வர்த்தக அணியில் மாநிலப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திங்கள் சந்தை ஜோசப்ராஜ், முன்னாள் எம்எல்ஏ-வான ரெஜினால்டு, வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் உள்ளிட்டவர்களையும் கணக்கில் எடுத்தால் குமரி மாவட்டத்தில் மட்டுமே மொத்தமாக 14 பேருக்கு மாநிலப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமரி மாவட்ட திமுக வட்டாரத்தில் நம்மிடம் பேசியவர்கள், ”கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் வாக்குகள் மட்டும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகம். மீனவர்களில் பெரும்பகுதி கிறிஸ்தவர்களாகவே இருக்கும் மாவட்டமும் இதுதான். அந்த வகையில், ஜோசப் ஸ்டாலினுக்கு மீனவர்கள் மத்தியில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதால் நல்ல பெயர் இருக்கிறது. அதற்காகவே அவருக்கு மீனவரணி மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவரது நியமனமானது, குமரி மாவட்டத்தில் வேகமாக வேரூன்றப் பார்க்கும் பாஜகவின் வளர்ச்சிக்கு நிச்சயம் பிரேக் போடும்.

ஹெலன் டேவிட்சனும், மனோ தங்கராஜூம் கிறிஸ்தவ நாடார் சமூகம். மேயர் மகேஷ் இந்து நாடார். சுரேஷ் ராஜன் இந்து பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர். இப்படி ஒவ்வொருவரது பின்னணியையும் அலசிப் பார்த்துத்தான் பொறுப்புகளை வழங்கி இருக்கிறது தலைமை. பாஜகவும் சங்பரிவார் அமைப்புகளும் குமரியில் ஆழமாகக் காலூன்றி வருகின்றன. இதைத் தடுக்கும் திமுகவின் திட்டமும் இந்த நியமனங்களின் பின்னணியில் இருக்கிறது” என்கிறார்கள்.

யாரும் குறை சொல்ல முடியாத வகையில் அனைத்து கோஷ்டிகளுக்கும் பொறுப்புகளை வாரி வழங்கி இருக்கிறது திமுக தலைமை. பொறுப்புக்கு வந்திருப்பவர்கள் பொறுப்பாக கழகத்தை காக்கிறார்களா அல்லது நிலவரத்தை கலவரமாக்கு கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in