`என்னை கைது செய்ய வாருங்கள்': காவல்துறைக்கு சி.வி.சண்முகம் அழைப்பு

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் ஆர்ப்பாட்டம்

``என்னை கைது செய்ய வாருங்கள், தயாராக இருக்கிறேன்'' என்று காவல்துறைக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், "ஆட்சி பொறுப்பிற்கு வந்த ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய பணிகளை மறந்து அதிமுகவை எப்படி அழிப்பது என்று 24 மணி நேரமும் சிந்தித்து கொண்டிருக்கிறார். அப்படி அவர் வகுத்த திட்டப்படித்தான் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், கைது செய்வதுமாகும். இப்படி செய்தால் அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்.

திமுகவை அழிக்கவேண்டும் என்று ஜெயலலிதா நினைக்காததால், அண்ணா சாலையில் வைகோவின் ஊர்வலத்திற்கு தடை விதித்தார். அப்படி தடை விதிக்காமல் இருந்திருந்தால் அவர் அறிவாலயத்தை கைப்பற்றி இருப்பார். அப்போதே திமுக அழிந்து இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா போல எங்களுக்கு பெருந்தன்மை இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விரட்டி அடிக்க வேண்டும் என தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. திமுகவில் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பள்ளம் தோண்டி கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தை ஆளும். அப்போது திமுக இன்று செய்வதற்கு எதிர்வினையை அனுபவிப்பார்கள்.

திமுக அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிகாட்டுகின்ற ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர். கைதுக்கு அதிமுக என்றைக்கும் அஞ்சியது இல்லை. பலமுறை சிறை பார்த்தவர்கள் தான் அதிமுகவினர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த தேர்தலில் எதையும் கண்டுகொள்ளவில்லை. திண்டிவனத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர். திமுகவினரின் வன்முறைக்கு பயந்து சென்னையில் 50 சதவிகித மக்கள் வாக்களிக்க செல்லவில்லை.

5 மணி முதல் 6 மணி வரை கரோனால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்ட நேரத்தில் திமுகவின் கள்ளஓட்டு போட்டனர். அதனை தடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர். திமுக அரசு பொய் வழக்குகளை அதிமுகவினர் மீது போட்டு வருகிறது. அடுத்து சி.வி.சண்முகம் கைது செய்யப்பட உள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். அப்படி கைது செய்ய வேண்டும் என்றால் தாராளமாக என்னை கைது செய்ய வாருங்கள். தயாராக இருக்கிறேன். கருணாநிதி முடியாத காலத்திலும் முதலமைச்சர் பதவியை ஸ்டாலினுக்கு வழங்கவில்லை. அவர் சுயநினைவு இழந்தபோது தன்னை செயல்தலைவராக அறிவித்து கொண்டவர்தான் ஸ்டாலின்.

அதிமுகவை அழிப்பதற்காக பணத்தையும், நேரத்தையும் செலவழிக்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை தமிழக முதல்வர் சிந்திக்க வேண்டும். திமுகவில் சமூக நீதி இல்லை. கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி. இதில் எங்கே சமூக நீதி உள்ளது. திமுகவை தூக்கி எறியும் காலம் விரைவில் வரும்" என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in