`அவர்களின் நிலை கவுரவமாக இல்லை; மிகவும் பரிதாபமாக உள்ளது'- ராமதாஸ்

`அவர்களின் நிலை கவுரவமாக இல்லை; மிகவும் பரிதாபமாக உள்ளது'- ராமதாஸ்

"இனியும் தாமதிக்காமல், கவுரவ விரிரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும்; அதன் மூலம் அவர்களுக்கு நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வரும் நீதியை, இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் எழுப்பப்பட்டு வருகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் சார்ந்த இச்சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவர்களின் நிலை கவுரவமாக இல்லை; மாறாக, மிகவும் பரிதாபமாக உள்ளது. ரூ.10,000 ஊதியத்தில் பத்தாண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த அவர்களுக்கு படிப்படியாக ஊதியம் உயர்த்தப்பட்டு, நடப்பாண்டு முதல் தான் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதிலும் கூட, மே மாதம் தவிர்த்து ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பிக்கும் அவர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம் ரூ.700-க்கும் குறைவு தான். கிராமப்பகுதிகளில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குக் கூட இதைவிட அதிக ஊதியம் வழங்கப்படும் நிலையில், முனைவர் பட்டம் பெற்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் பணி செய்யும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்த அளவுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்குவதை நியாயப்படுத்த முடியாது. அதிலும் கூட பல தருணங்களில் கல்வியாண்டின் தொடக்கத்தில் 5 மாதங்கள் ஊதியம் கிடைக்காது. பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதையடுத்து நடப்பாண்டில் தான் அந்த தாமதம் குறைக்கப்பட்டு, சில மாதங்கள் முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது.

கவுரவ விரிவுரையாளர்கள் கவுரவமாக பணி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீர்வு அவர்களை பணி நிலைப்பு செய்வது தான். அதற்கான அனைத்துத் தகுதிகளும் அவர்களுக்கு உள்ளன. அவர்களில் பெரும்பான்மையினர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். அவர்களின் பெரும்பான்மையினர் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்கள் ஆவர். தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனாலும், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வருவதில்லை.

கவுரவ விரிவுரையாளர்களில் பெரும்பான்மையினர் 45, 50 வயதைக் கடந்து விட்டனர். இதன்பிறகு அவர்கள் வேறு பணிக்கு செல்வதோ, பொதுவான விதிகளின் கீழ் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதோ சாத்தியமில்லை. அதனால் தான் அவர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிய காலத்தையும், அவர்களின் கல்வித்தகுதியையும் கொண்டு அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.

முந்தைய ஆட்சியின் நிறைவில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் நோக்குடன், 2021 பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்குகளால் அது சாத்தியமாகவில்லை. எனினும், அடுத்த சில நாட்களில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கிவிட்டது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அது தடைபட்டது. புதிய அரசு பதவியேற்ற பிறகும் கூட கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், பல மாதங்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்வதற்கான நியாயங்களை பலமுறை பட்டியலிட்டுள்ளேன். அவற்றை மீண்டும், மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. மாணவச் செல்வங்களுக்கு கற்பிக்கும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களின் கோரிக்கைகளுக்காக சாலையில் இறங்கி போராடும் நிலையை அரசே உருவாக்கக்கூடாது. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல், கவுரவ விரிரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும்; அதன் மூலம் அவர்களுக்கு நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வரும் நீதியை, இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in