
10.72 லட்சம் கோடி ரூபாய் வராக்கடனை வசூல் செய்து
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என வழக்கறிஞர் நந்தினி ஒட்டன்சத்திரத்தில் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நாடு பற்றி சிந்திப்போம் பிரச்சாரம் நடந்தது. இதில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி பேசுகையில்," நாடு பற்றி சிந்திப்போம் பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். கடந்த 8 ஆண்டுகளில் வராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் ரூ.10.72 லட்சம் கோடியை குஜராத் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடித்துள்ளனர்.
இப்பணத்தை வசல் செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். வராக்கடன் தள்ளுபடி ஊழலே, இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களிலேயே மெகா ஊழலாகும். இந்த ஊழலை எதிர்த்துப் போராட எந்த எதிர்க்கட்சிக்கும் துணிவில்லை. கார்ப்பரேட் கொள்ளை கும்பலின் கூட்டாளிகளாகவே அனைவரும் உள்ளனர். கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ஊழலைப் பற்றிய முழு உண்மைகள் மக்களுக்குத் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு வருகிறது. இதனால், மக்களை நேரடியாக சந்தித்து இந்த ஊழல் குறித்த உண்மைகளை துண்டுப்பிரசுரங்களாக அச்சிட்டு மக்களிடம் கொடுத்து பிரசாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு நெருக்கடி கொடுத்தாலும் இப்பிரச்சாரத்தை தொடருவோம" என்று அவர் பேசினார்.
மது ஒழிப்புக்காக பல ஆண்டுகளாக நந்தினி, அவரது தந்தை ஆனந்தனுடன் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து கைது செய்யப்பட்டவர். நந்தியின் சகோதரியும் இப்போராட்டத்தில் இணைந்து பங்கேற்றுவது குறிப்பிடத்தக்கது.