`காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது'- எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் `காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது'- எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

"காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்று சில கட்சிகள் சொல்லக்கூடிய வாதங்களை நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும் நடைமுறைக்கு சரி வராது'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் நடந்த தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய கழகத்தை, கலைஞர் அவர்களே நீங்கள் கட்டிக் காத்த கழகத்தை எந்நாளும் நிரந்தரமாக ஆட்சி பொறுப்பில் வைத்திருப்பேன். ஏதோ நான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. 30 பேர் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த இயக்கம் அதற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அல்ல. இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளால் அடிமைப்பட்டு கிடந்ததை மீட்க நூறு ஆண்டுகளுக்கு மேல் திராவிட இயக்கத்தை காக்கக்கூடிய கடமை நமக்கு தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேறி காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த இரண்டும்தான் நம்முடைய இரு லட்சிய கண்கள். இதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். கொள்கையை பரப்ப கட்சி. கொள்கை நிறைவேற்ற ஆட்சி. இந்த இரண்டும் வழியாக தமிழ்நாட்டை என்றும் தலை நிமிர வைப்போம். இதனைத் தான் இந்த இரண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் நிரூபித்து காட்டி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையிலே 505 வாக்குறுதிகளை வழங்கினோம். அதில் 85 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மீதமுள்ளவை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்படாத எத்தனையோ திட்டங்களை தீட்டி வருகிறோம். என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதலமைச்சர், நம்பர் ஒன் தமிழ்நாடு என்று அங்கீகாரம் பெறுவதைவிட நம்பர் ஒன் நன்மைகள் தரக்கூடிய காலமாக நம்முடைய ஆட்சி காலம் அமைய வேண்டும். அதனால் தான் தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. இது என்னுடைய பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மேடை மட்டுமல்லாமல் இந்தியாவில் புதிய அரசியலுக்கான தொடக்க விழா மேடையாக அமைந்திருக்கிறது. இதுதான் எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

இன்றைய காலத்திற்கு மிக மிகத் தேவை 2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதற்கான தேர்தல் அது. ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தி ஒற்றைத்தலைமை சர்வாதிகார நாடாக மாற்றக்கூடிய பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தி ஆக வேண்டும். பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே வெற்றி பெற்றுவிடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலை தீர்மானித்தால் இழப்பு நமக்குத் தான் என்பதை அனைத்துக்கட்சிகளும் உணர வேண்டும். இதை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல அனைத்துக் கட்சிக்கும் சேர்த்து தான் நான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டு காலமாக நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு ஒற்றுமை என்ற அடிப்படையில் தான். இதை 2021 சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை வைத்துக்கொண்டு நான் அப்போது சொன்னேன். தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை இந்தியா முழுவதும் அமையுங்கள் என்று சொன்னேன். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்று சில கட்சிகள் சொல்லக்கூடிய வாதங்களை நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும் நடைமுறைக்கு சரி வராது. ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் அடிக்கல் நாட்டி விட்டு இன்று வரை ஒரு செங்கலுக்கு மேல் வைக்காமல் தமிழ்நாட்டை கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. மொத்தமே 12 கோடி ரூபாய் தான் மதுரை எய்ம்ஸுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது எட்டு கோடி தமிழர்களை ஏமாற்றும் காரியம் அல்லவா?எட்டுக்கோடி மக்களின் சார்பாக நீட் விலக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றிய அரசு நாட்களை கடத்தி வருகிறது. இவர்கள் தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சம்ஸ்கிருதத்துக்கு கோடி கோடியா பணம் ஒதுக்குவாய். சங்கத் தமிழுக்கு வெறுங்கையை நீட்டுவாய் என்றால், அதனால் அவமானப்படுத்தப்படுவது திருவள்ளுவர், இளங்கோவடிகள் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து கொந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிறைவாக கழக உடன்பிறப்புகளுக்கு ஒன்றை மட்டும் தான் சொல்லிக் கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தொண்டர்களுக்கு ஒரு வரலாற்று கடமை இருக்கிறது. புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றாக வேண்டும். தலைவர் கலைஞர் அவர்கள் வழிநடத்திய காலத்திலே 2004-ம் ஆண்டு 40க்கு 40 வெற்றி பெற்றோம். கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை இழந்தோம். அதனுடன் சேர்த்து நம் அணி 40 தொகுதிகளை கைப்பற்றி ஆக வேண்டும். அதற்காக இன்து முதல் கழக உடன்பிறப்புகள் உழைத்திட வேண்டும். அதுதான் நீங்கள் எனக்கு தரக்கூடிய பிறந்தநாள் பரிசாக இருக்கும். களம் நமக்காக காத்திருக்கிறது. நாற்பதும் நமதே, நாடும் நமதே" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in