உ.பி தேர்தலில் போட்டியிட ரூ.8 கோடி பேரம்

அகிலேஷ் மீது கூட்டணி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு
உ.பி தேர்தலில் போட்டியிட ரூ.8 கோடி பேரம்

சமாஜ்வாதியின் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ராஜினாமா செய்துள்ளார். இவர், கட்சி தலைமைக்கு எழுதிய கடிதத்தில், உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ரூ.8 கோடி வரையில் லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுப்பியுள்ளார்.

உபி சட்டப்பேரவை தேர்தலில் வெல்ல தீவிரம் காட்டிய சமாஜ்வாதி கூட்டணிக்கு தோல்வி கிடைத்தது. 403 சட்டப்பேரவை தொகுதிகளில் 375 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இச்சூழலில், ராஷ்டிரிய லோல் தளம் (ஆர்எல்டி) கட்சியின் உபி மாநில தலைவரான டாக்டர் மசூத் அகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மீதான தனது கடிதத்தை கடந்த சனிக்கிழமை அவர், ஆர்எல்டியின் தலைவரான ஜெயந்த் சவுத்ரிக்கு அனுப்பியிருந்தார். இதில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்ச்ங் யாதவ் மற்றும் ஜெயந்த் மீது மசூத் எழுப்பியுள்ள புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்தமுறை தேர்தலில் பட்டியலினத்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதாக மசூத் புகார் தெரிவித்துள்ளார். பட்டியலின மக்களின் ஆதரவுடன் வளர்ந்து வரும் இளம் தலைவரான ராவண் என்கிற சந்திரசேகர ஆஸாத்தின் பீம் ஆர்மி கட்சியை கூட்டணியில் சேர்க்காததற்கு மசூத் கண்டித்துள்ளார். கடந்த 2015-ல் ஜெயந்தின் தந்தையான மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அஜீத்சிங்கின் வேண்டுகோளை ஏற்று ஆர்எல்டியில் இணைந்தவர்.

கட்சி தலைவர் ஜெயந்திற்கு சூத் எழுதிய தனது ராஜினாமா கடிதத்தில், "தலைமைக்கான ஆதிக்கத்தை நீங்கள் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷுடன் இணைந்து கட்சியில் புகுத்தி விட்டீர். எனது எச்சரிக்கைகளுக்கு பின்பும் பீம் ஆர்மியின் ஆஸாத்தை கூட்டணியில் சேர்க்கத் தவறி விட்டீர்கள். கட்சியின் மூத்த தலைவர்களை தவிர்த்து வெளியிலிருந்து வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்தீர்கள்.

இதன் பின்னணியில் பல கோடி ரூபாய் பேரம் பேசி பெற்றிருந்தீர்கள். குறிப்பாக மதியம் 2 மணிக்கு கட்சியில் இணைந்த கஜராஜ்சிங்கிற்கு மாலை 4 மணிக்கு ஹாபூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தீர். இதற்காக அந்த வேட்பாளரிடம் ரூ.8 கோடி பெறப்பட்டது. கடைசிநேரத்தில் மூன்றுக்கும் அதிகமான முறைகளில் வேட்பாளர்களும் மாற்றப்பட்டனர். இதுபோன்ற காரணங்களால் நம் கூட்டணிக்கு வெறும் 200 முதல் 5,000 வாக்குகளில் 50 தொகுதிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "தேர்தலுக்கான குறித்த நேரத்தில் வேட்பாளர்களை அறிவிக்காமல், பணம்பெற்றுக் கொண்டு வாய்ப்பளித்தது ஏன்? ஆர்எல்டி கட்சி சின்னத்தில் சமாஜ்வாதியின் வேட்பாளர்கள் போட்டியிட்டது ஏன்? பட்டியலினத்தவர்கள், முஸ்லிம்கள் இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாதது ஏன்? அப்னா தளம் (கமர்வாத்), மஹான் தளம் ஆகிய கட்சியினர் அவமானப்படுத்தப்பட்டபோது கூட்டணி தலைவர்களான நீங்களும் அகிலேஷும் மவுனம் காத்தது எப்படி? இக்கேள்விகளுக்கு பதில் அளித்தால் நான் கட்சியின் சாதாரண உறுப்பினராகத் தொடர்வது குறித்து பரிசீலிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

மசூத் புகாருக்கு பதில் அளித்துள்ள ஆர்எல்டியின் தேசியப் பொதுச்செயலாளர் திரிலோக் தியாகி, தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தலைவருக்கு எழுத வேண்டிய ராஜினாமா கடிதத்தில் புகார்களையும் குறிப்பிட்டு பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப்பட்டது அதன் சாட்சி எனவும் தியாகி குறிப்பிட்டுள்ளார். தனது புகாரில் மசூத், அநாவசியமாக சமாஜ்வாதியின் தலைவர்களான அகிலேஷ் மற்றும் ஷிவ்பால்சிங் யாதவின் பெயர்களையும் இழுத்திருப்பது தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உபி தேர்தலின் தோல்வி குறித்து ஆர்எல்டி தலைவர் ஜெயந்த், மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இவர்கள் அளிக்கும் அறிக்கை குறித்து அடுத்த மாதம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் சமாஜ்வாதிக்கு 111, ஆர்எல்டிக்கு 8 தொகுதிகளும் கிடைத்துள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in