மேடையேற மறுத்த கூட்டணிக் கட்சி முதல்வர்... நிகழ்ச்சியை ரத்து செய்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மிசோரம் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய முதல்வர் ஜோரம்தங்கா மறுத்திருந்தார். இதனால் மிசோரமில் இன்று பங்கேற்க இருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மிசோரமில் பிரச்சாரம் செய்கிறார்.

40 தொகுதிகளைக் கொண்டது மிசோரம் மாநில சட்டசபை. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில் பாஜகவும் தேர்தல் களத்தில் நிற்கிறது. தேர்தல் கருத்து கணிப்புகளைப் பொறுத்தவரையில் மிசோரம் மாநிலத்தில் இம்முறை தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் அதிகம் என்கின்றன.

மிசோரம் முதல்வர் ஸோரம்தங்கா
மிசோரம் முதல்வர் ஸோரம்தங்கா

மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, வடகிழக்கு மாநிலங்களுக்கான கூட்டணி ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. ஆனால் மணிப்பூர் குக்கி இனமக்களுக்கு எதிரான வன்முறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்தவில்லை என்கிற அதிருப்தி தொடருகிறது. மிசோரம் மாநிலத்தின் பூர்வகுடிகளும் குக்கி இனமக்களும் தொப்புள் கொடி உறவு கொண்ட ஒரே இன மக்கள் என்பதால் இந்த கோபத்தை மிசோ தேசிய முன்னணி வெளிப்படுத்துகிறது.

இதனாலேயே மிசோரமில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் அவருடன் ஒரே மேடையில் பங்கேற்க முடியாது என மிசோரம் முதல்வரும் மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா பகிரங்கமாக அறிவித்தார். இது பாஜகவை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்து பிரதமர் மோடி தமது மிசோரம் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டார். பிரதமர் மோடிக்கு பதில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மிசோரமில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in