பணால் ஆகிறதா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்?

நிலக்கரிச் சுரங்கம்
நிலக்கரிச் சுரங்கம்

மீண்டுமொருமுறை காவிரி டெல்டாவின் தலைக்கு மேலே கத்தியொன்றை தொங்கவிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் போராட்டக்களமாகிக் கிடந்த டெல்டா மாவட்டங்கள் சற்றே அமைதியாகிக் கிடந்த நிலையில், வெள்ளாமையில் கைவைக்கும் இன்னொரு ஓலையோடு வந்து நிற்கிறது மத்திய அரசு.

மத்திய நிலக்கரி அமைச்சகம் இந்தியா முழுவதும் 101 பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் காவிரி டெல்டாவில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திலுள்ள சேத்தியாதோப்பு கிழக்கு மற்றும் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டி ஆகிய 3 பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிவிப்பானது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த ஏல அறிவிப்புக்கு எதிராக உடனடியாக அனைத்துக் கட்சிகளுமே கண்டனங்களைப் பதிவு செய்தனர். விவசாய அமைப்புகளும் தங்களின் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு களத்தில் குதித்தன. விவசாயிகளுக்கு நம்பிக்கையைப் பகிர்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த ஏல அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர், “நானும் டெல்டாகாரன் தான். எனவே, இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என அறிவித்தது விவசாயிகளை நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது. நாடாளுமன்றத்திலும் திமுகவும் அதிமுகவும் இந்த விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொண்டுவந்தன.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடந்த முறை மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வந்தபோதெல்லாம் மத்திய அரசின் பக்கம் நின்று, இந்த திட்டங்களுக்கு ஆதரவாகப் பேசிவந்த தமிழக பாஜக, இந்த முறை இந்த 3 நிலக்கரி சுரங்க திட்டங்களுக்கும் ஆரம்பகட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் விவசாயிகள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் வியப்பில் உள்ளனர். பேரவையில் இந்தத் திட்டத்துக்கு எதிராகப் பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், “விவசாயம் நமக்கு மிகவும் முக்கியம். எனவே இத்திட்டங்களில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலையும், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை நேரில் சந்தித்து, 2020-ல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த 3 பிளாக்குகளும் வருகின்றன. எனவே சுரங்க ஏலப் பட்டியலிலிருந்து இந்த 3 பகுதிகளையும் நீக்கவேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்திருக்கிறார்.

மத்திய அரசு, மாநில அரசுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் இந்த நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பினை வெளியிட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ‘எதிர்காலத்தில் மாநில அரசுடன் தொடர்புடைய பொது அறிவிப்புகளை வெளியிடும் முன்பு மாநில அரசிடம் ஆலோசனை செய்து தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க வேண்டும்’ என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெல் வயல்
நெல் வயல்

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் சேதுராமன், “வடசேரி பிளாக்கில் மட்டும் 68 சதுர கி.மீ பரப்பில் 68 போர்வெல்கள் போட்டு நிலக்கரி இருப்பு குறித்த ஆய்வுப்பணிகளை பல ஆண்டுகளுக்கு முன்பே முடித்துவிட்டனர். அப்போது போர்வெல் மூலம் நிலக்கரியை எடுத்து ஆய்வுகளுக்கு உட்படுத்தியது எம்.இ.சி.எல் (Mining Engineering Corporation Limited) நிறுவனம்தான். ஆய்வுகளில் இப்பகுதிகளில் கிடைப்பது பழுப்பு நிலக்கரி என்பதும் தெரியவந்துள்ளது.

இப்போது வடசேரியில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் மன்னார்குடி லிக்னைட் திட்டத்தின் விரிவாக்கம்தான். ஏற்கெனவே மன்னார்குடியில் 674 சதுர கிமீ பரப்பளவை ஜிஇசிஎல்-லுக்கு ஏலம் விட்டார்கள், அதனை 6 பிளாக்காக பிரித்தார்கள். அத்திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதியளிக்காத காரணத்தால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதில் ஒரு பகுதிதான் இந்த வடசேரி திட்டம். வடசேரியில் 755 மில்லியன் டன் நிலக்கரி இருப்பதாக கண்டறிந்துள்ளனர். சேத்தியாதோப்பில் 100 மில்லியன் டன் நிலக்கரி இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இந்த மூன்று பகுதிகளிலும் நிலக்கரி, ஹைட்ரோ கார்பன், சிங்க் கேஸ் போன்றவற்றை எடுப்பதற்கான ஏலம் ஏப்ரல் 29-ம் தேதி நடக்கவிருக்கிறது.

சேதுராமன்
சேதுராமன்

நிலக்கரி எடுக்கும்போது அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். அதற்கு கண்முன்னே உள்ள சாட்சி நெய்வேலி. வடசேரியில் 460 அடியிலிருந்து 740 அடி வரை நிலக்கரி கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. 150 அடியில் நிலக்கரி கிடைக்கும் நெய்வேலியே இத்தனை பாதிப்புகளை சந்திக்கிறது என்றால், மிக ஆழமான பகுதிகளில் நிலக்கரி எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். மேலும், நிலக்கரி துகள்களின் பாதிப்பால் சுற்றியுள்ள பகுதிகளிலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்.

ஏற்கெனவே மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி கொடுக்காத காரணத்தால் அத்திட்டங்கள் கைவிடப்பட்டது. தற்போது பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை எதிர்ப்பதால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வராது என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த காலங்களில் நெடுவாசல், எண்ணெய் எரிவாயு திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை பாஜக ஆதரித்தது. இப்போதுதான் முதன்முறையாக பாஜக இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே, நிலக்கரி எடுப்பு ஏல நடவடிக்கையிலிருந்து இந்த மூன்று இடங்களும் நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது” என்றார்

நிலக்கரி திட்டங்கள் பற்றி பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், “ தமிழகத்தில் தற்போது வடசேரி, சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வீராணம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்தத் திட்டங்களுக்காக 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. வீராணம் நிலக்கரி திட்டத்துக்கான முதற்கட்ட ஆய்வை கடந்த டிசம்பர் மாதம் எங்கள் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தியது.

இந்த திட்டங்கள் என்.எல்.சி-யின் விரிவாக்கமாக இருக்கும் என கருதுகிறோம். 2025-ல் இந்த நிலக்கரி சுரங்கங்களை எல்லாம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிலப்பரப்பை கையகப்படுத்தி அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதுதான் இந்திய அரசின் திட்டம்.

பேராசிரியர் த ஜெயராமன்
பேராசிரியர் த ஜெயராமன்

ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசை துச்சமென நினைத்து இத்திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல சட்டம் உள்ளது, அதையெல்லாம் சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறார்கள். இத்திட்டங்கள் செயல்முறைக்கு வந்தால் இங்குள்ள மக்கள் அகதிகளாக வெளியேறுவார்கள், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

தமிழக முதல்வர் தற்போது கடிதம் எழுதியுள்ளார், இத்திட்டம் செயல்முறைக்கு வராது என்ற நம்பிக்கை உள்ளதாக சொல்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் இதுபோன்ற நாசகார திட்டங்களுக்காகப் போராடித்தான் தடுத்து நிறுத்த வேண்டுமா, இது என்ன கூட்டாட்சி தத்துவம்? மாநில அரசிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையான திட்டங்களை அறிவிப்பது கூட்டாட்சிக்கு விரோதமான செயல். தமிழ்நாடு அரசு தனது உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது.

எம்.இ.சி.எல் நிறுவனம் இதற்கு முன்னமே 500 இடங்களில் ஆழ்துளை ஆய்வுகளை நடத்தியுள்ளது. மைக்கேல்பட்டியில் தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே 19 இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளது. இதுபோல மாநில அரசின் அனுமதியே இல்லாமல் தொடர்ந்து அடாவடியாக ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இதுபோல ஆய்வு செய்தால் 50 லட்சம் ரூபாய் வரைக்கும் அபராதம் போட சட்டத்தில் வழிவகை உள்ளது.

அதனடிப்படையில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் முழு காவிரிப்படுகையையும் கொண்டுவர வேண்டும். எண்ணெய்-எரிவாயு எடுக்கும் பழைய திட்டங்கள் கைவிடப்படவேண்டும். வயல்களின் குறுக்கே பைப்லைன்கள் பதிக்கும் திட்டத்தை தடுக்கவேண்டும். சட்டத்தில் சில சொற்கள் தெளிவின்றி உள்ளது. நிலக்கரி எடுப்பு என்ற சொல் அதில் சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.

இந்த 3 பகுதிகளுக்கான ஏல அறிவிப்பு குறித்து அதிகாரிகள் தரப்பில் பேசியபோது, “ என்னதான் மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டாலும், நிலங்களை கையகப்படுத்தித் தருவதும் , சுற்றுச்சூழல் அனுமதியளிப்பதும் மாநில அரசின் கைகளில்தான் உள்ளது. இதனால்தான் கடந்த பலமுறை ஏலம் எடுக்கப்பட்ட ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள்கூட நடைமுறைக்கு வரவில்லை. எனவே, மாநில அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் இத்திட்டம் நடைமுறைக்கு வர சாத்தியமே இல்லை” என்றனர்.

ஆண்டுக்கொருமுறை இது போன்ற அதிர்ச்சிகரமான திட்ட அறிவிப்புகள் வெளிவருவதும், அதைப் போராடி நிறுத்துவதும் காவிரி டெல்டாவில் தொடர்கதையாகிவிட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல சட்டமாவது நம்மை பாதுகாக்கும் என்று நிச்சயமாக நம்பினார்கள் உழவர் பெருங்குடி மக்கள். அதன்பின்பும் இத்தகைய அறிவிப்புகள் வெளிவருவது விவசாயிகளின் நிம்மதியை ஒட்டுமொத்தமாகப் பறித்துள்ளது!

டெய்ல் பீஸ்: டெல்டா பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த நிலக்கரி சுரங்கத்துக்கான ஏல நடைமுறைகளை விலக்கிக்கொள்வதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருக்கிறார். “இதற்குக் காரணம் டெல்டாகாரர் அல்ல... போலீஸ்காரர்” என்று அண்ணாமலையைக் கொண்டாடுகிறார்கள் தமிழக பாஜககாரர்கள். “காரணம் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால், இனியும் இந்தத் துயரம் தொடராமல் இருக்கட்டும்” என்று வேண்டி நிற்கிறார்கள் டெல்டாகாரர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in