நிலக்கரி இருப்பும் மின்வெட்டு அரசியலும்!

தடங்கலுக்கு வருந்தும் மாநில அரசுகள்
நிலக்கரி இருப்பும் மின்வெட்டு அரசியலும்!

ஒடிசாவில் கார் பேனட் மீது ஒரு இளம்பெண் சப்பாத்தி சுடுவது போன்ற வீடியோ காட்சி சமீபத்தில் வைரலானது. கொதிக்கும் வெயிலில் சப்பாத்தி கூட சுடலாம் என்ற நகைச்சுவை உணர்வுடன் உருவாக்கப்பட்டது அந்த வீடியோ என்றாலும், உண்மையில் இந்தியாவில் மார்ச் மாதத்தில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் சுட்டெரித்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அதை விட கூடுதலாக ஏப்ரல் மாதம் வெப்பநிலையின் அளவு பல மாநிலங்களில் கூடியுள்ளது. இந்த கொடுமையான வெயில் காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மின்வெட்டு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் வெயிலை விட மக்கள் சூடாகி விடுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

உண்மையில் என்ன காரணம்?

மின்வெட்டு பிரச்சினையை வைத்து அதிமுக அரசியல் செய்யத் தொடங்கி இருக்கும் நிலையில், “மத்திய அரசு உரிய நிலக்கரியைத் தராததால் தான் தமிழகத்தில் மின்வெட்டு” என முதல்வர் ஸ்டாலினும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் சொல்கிறார்கள்.

ஆனால், "மத்திய அரசிடமிருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் டன் நிலக்கரி தொகுப்பு வழங்கப்படுகிறது. அதை வைத்துத்தானே கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு தடையற்ற மின்விநியோகம் செய்தது" என்று கொக்கிபோடுகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. உண்மையில் தமிழகத்தில் மட்டும் தான் தற்போது மின்வெட்டு ஏற்பட்டுள்ளதா?

மின் உற்பத்தி நிலையங்கள்

இந்தியாவின் மின்சாரத் தேவையில் 75 சதவீதத்தை அனல் மின்நிலையங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. இந்த நிலையில், "அரசுக்குச் சொந்தமான 150 மின் உற்பத்தி நிலையங்களில் 81 நிலக்கரி நிலையங்களில் நிலக்கரி இருப்பு காலியாகும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 51 தனியார் அனல் மின்நிலையங்களில் ஏப்ரல் 28-ம் தேதி காலகட்டத்தில் நிலக்கரி கையிருப்பு நிலைமை மிகவும் மோசமாகும்" என மத்திய மின்சார ஆணையம் (சிஇஏ) அண்மையில் அறிவித்தது. இதற்குக் காரணம், நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டது தான்.

ஆனால்,"அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான 21.55 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. ‘கோல்’ நிறுவனத்தின் கையிருப்புடன் ஒட்டுமொத்தமாக 72.5 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது " என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சொல்கிறார். "நிலக்கரி பற்றாக்குறை குறித்து யாரும் பீதியடையத் தேவையில்லை" என்றும் அவர் தைரியம் சொல்கிறார்.

அமைச்சர் இப்படிச் சொன்னாலும், 2021 ஏப்ரல் தொடங்கி 2022 ஜனவரி வரையிலான காலகட்டத்தில், மின் துறையில் நிலக்கரி இறக்குமதி 22.73 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 39.01 மில்லியன் டன்னாக இருந்தது. இதன் காரணமாக, இந்தியா முழுவதும் உள்ள அனல் மின்நிலையங்களில் கடும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை.

இதன் காரணமாகவே தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியாணா உள்பட 12 மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, தூத்துக்குடியில் உள்ள அனல் மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அண்மையில் 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் 840 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. அவசரமாக, சுமார் 28 டன் நிலக்கரி வந்து சேர்ந்ததால் இந்தப் பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டது என்பது வேறு விஷயம்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் மின்வெட்டு அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், தற்போதைய மின்வெட்டுக்கு காரணம் மத்திய அரசு தான் என குற்றம் சாட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தனியார் முதலாளிகள் நலனுக்காகத்தான் மாநில அரசுகளுக்கு நிலக்கரி வழங்காமல் மத்திய அரசு இழுத்தடிக்கிறது” என்கிறார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், “நிலக்கரியை வழங்க மாநில அரசுகளுக்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். ஆனால் மத்திய அரசோ, தனியார் மின் நிலையங்களுக்கு அந்த முன்னுரிமையை வழங்குகிறது. அரசு மின் உற்பத்தி நிலையங்களைக் காவு கொடுத்து தனியாரிடம் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்று மத்திய அரசே கட்டாயப்படுத்துகிறது. தனியார் மின்நிலையங்களை தடையின்றி இயக்குவது, அதன் மூலம் தனியார் முதலாளிகளை மகிழ்ச்சிப்படுத்துவது, இதன் மூலம் அரசு மின் நிலையங்களை நிலக்கரி இல்லாமல் முடக்குவது. இது தான் மத்திய அரசின் நோக்கம்" என்றார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மாநில அரசுகள் என்ன சொல்கிறது?

இதே குற்றச்சாட்டை தான் பல மாநில மின்துறை அமைச்சர்களும் சொல்கின்றனர். "தமிழகத்தின் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரியை மட்டுமே தருகிறது" என்கிறார் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

"மாநிலங்களின் மின் நுகர்வுத் தேவைக்கு ஏற்ப நிலக்கரி ஒதுக்கப்படுவதில்லை. இதனால் தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையே உள்ள 3,500 மெகா வாட் முதல் 4 ஆயிரம் மெகா வாட் வரை உள்ள மின் பற்றாக்குறையை குறைக்க மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்று மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் வெளிப்படையாக பேசியுள்ளார்.

"தலைநகர் டெல்லியில் குறைந்தது 21 நாட்களுக்காவது நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டும். ஆனால், ஒரு நாளுக்கும் குறைவான நிலக்கரியே மின் உலைகளில் உள்ளன. இதனால், மெட்ரோ மற்றும் அரசு மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படக் கூடும்" என டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர குமார் ஜெயின் அச்சம் தெரிவித்துள்ளார். இப்படி நிலக்கரி பற்றாக்குறை குறித்த கூக்குரல்கள் பல மாநிலங்களில் இருந்தும் கேட்கிறது.

தேவை அதிகரிப்பு

கோடை வெயிலின் அளவு மட்டுமின்றி மின் நுகர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் மின்தேவையும் அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில், உள்நாட்டு மின் தேவை 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாகவும் பலமாநிலங்கள் இருளில் மூழ்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, நிலக்கரியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து தனியார் முதலாளிகளிடமிருந்தும் நிலக்கரி கொள்முதலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆனாலும், அப்படி கொள்முதல் செய்வதை மாநிலங்களுக்கு பங்கிட்டு வழங்குவதில் தான் சிக்கல் நிலவுகிறது.

மின்வெட்டுப் பிரச்சினையால் திமுக ஆட்சிக்கு பழையபடி கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ‘தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்ய இந்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா

தமிழகத்தில் நிலவும் திடீர் மின்வெட்டு பிரச்சினை குறித்தும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் திமுகவின் மாநில செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னாவிடம் கேட்டோம். "ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட 'விஷன் -2023' தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1லட்சம் கோடி ரூபாயில் மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் எனச் சொன்னார்கள். இதன்படி பார்த்தால் கடந்த 8 ஆண்டுகளில் 27 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அப்படி எந்த மின் உற்பத்தி திட்டமும் அமல்படுத்தப்படவில்லை.

திமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான் இன்றளவும் தமிழக மின் தேவையை பூர்த்தி செய்துவருகின்றன. இப்போது, பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் முரட்டுத்தமான பிடிவாதத்தை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. நிலக்கரி கொண்டு வர ரயில்வே வேகன்கள் போதிய அளவில் இல்லை என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகிறார். இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்ட பின்பு தான், நிலக்கரி கொண்டு வர 42 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிக்கிறது.

‘கோல் இந்தியா’ (இந்திய நிலக்கரி நிறுவனம்) தமிழகத்திற்கு சப்ளை செய்ய வேண்டிய நிலக்கரியை முறையாக சப்ளை செய்யவில்லை. ரயில்வே, கோல் நிறுவனம் ஒருங்கிணைப்பு இல்லாததும் இதற்கு ஒரு காரணம். அதற்காக மக்களை சிரமத்துக்கு ஆளாக்கக்கூடாது என்பதற்காக அரசின் கடன் சுமை அதிகமானாலும் பரவாயில்லை என தனியாரிடம் மின்சாரத்தை தமிழக அரசு வாங்கி வருகிறது.

தமிழகத்தில் தற்போது 2,115 மெகாவாட் மின்சாரம் தான் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் 10 நாட்களில் காற்றாலை மின்சாரம் நமக்குக் கிடைக்கத் துவங்கி விடும். மழையும் துவங்கி விட்டால் புனல் மின்சாரமும் கூடுதலாகக் கிடைக்கும். அதன்பிறகு மின்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது" என்று சொன்னார் தமிழன் பிரசன்னா.

‘ஜெயலலிதா அறிவித்தபடி அதிமுக ஆட்சியில் புதிதாக எந்த மின் திட்டமும் தொடங்கப்படவில்லையா’ என்ற கேள்விக்கு மட்டும் பதில் வாங்கிவிடலாம் என முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணியை பலமுறை தொடர்புகொண்டோம். அவர் பதில் சொல்ல தயாராய் இல்லை.

கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் என்பது பள்ளிக்கூட பிள்ளையைக் கேட்டாலும் பட்டெனச் சொல்வார்கள். அப்படி இருக்கையில், தேவை அதிகரித்ததால் தான் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது சிறுபிள்ளைத்தனமான பதிலாகவே தெரிகிறது. அதேபோல், மின் தேவைக்கு பெரும்பகுதி அனல் மின் நிலையங்களையே நம்பி இருக்கும் தேசத்தில் தேவைக்கு ஏற்ப நிலக்கரியை கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் இருப்பதையும் எளிதாக கடந்துவிடமுடியவில்லை.

இனியும், தடங்கலுக்கு வருந்தாமல் இருக்க மத்திய - மாநில அரசுகள் நிரந்தர தீர்வை எட்டட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in