`சகோதர உணர்வு பறைசாற்றட்டும்'- மலையாள மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

`சகோதர உணர்வு பறைசாற்றட்டும்'- மலையாள மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையிலும் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டு பெருவிழாவான திருவோணம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. நல்ல அரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும் வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள். அத்தப்பூ கோலமிட்டு பட்டாடையும் புத்தாடையும் உடுத்து அறுசுவை உணவு அருந்தி சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம்.

மாயோன் மேய ஓண நன்னாள் எனச் சங்க இலக்கியமா மதுரைக் காஞ்சியிலும் குறிப்பிடப்படும் திராவிட நிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா. கேரளா மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது. அத்தகைய திருநாளை தமிழ்நாட்டில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும் ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கு ஏற்ப இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும் சென்னையிலும் அரசு விடுமுறை அளித்தது கழக அரசு என்பதை தருணத்தில் நினைவு கூர்ந்து உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு தமிழ்நாட்டின் சார்பாக எனது ஓணத்திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதை பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டுத் திருவிழாக்கள் அமையட்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in