
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று ராமேஸ்வரம் செல்லும் வழியில் மீனவர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். இந்த திடீர் நிகழ்வினால் மீனவரின் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர்.
திமுகவின் தென் மாவட்ட வாக்கு சாவடி பாக முகவர்கள் பயிற்சி பட்டறை மற்றும் மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் - தேவிபட்டினம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் திமுக பாக முகவர்கள் பயிற்சி பட்டறை நேற்று காலை தொடங்கியது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, நேரு, பொன்முடி, ராஜகண்ணப்பன், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மாலையில் அங்கு வந்த முதல்வர் ஸ்டாலின், பாக முகவர்களிடையே உரையாற்றினார்.
இதன் பின் இரவு தங்குவதற்காக ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றார். முதல்வரின் கான்வே பாம்பன் பாலத்தை கடந்து சென்ற நிலையில் அக்காள்மடம் அருகே திடீரென நின்றது. அப்போது காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின், அப்பகுதியில் உள்ள சேதுபதி நகர் மீனவர் காலனிக்கு சென்றார்.
அங்கு மீனவர் மரியஹட்சன் என்பவரது வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் மரியஹட்சனின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் நலம் விசாரித்தார். அங்கு அவர்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்ததுடன், அரசு நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். வழியில் கூடியிருந்த மீனவ பெண்கள் பட்டா கேட்டு கோரிக்கை விடுத்தனர். பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் பதிலளித்து சென்றார்.