`மதவாதத்தை தூண்டி திமுக அரசு மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்'- முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்

``திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், சமூக நீதியும் இணைந்தது. அது அனைவரையும் சமமாக நடத்தும். தோளோடு தோள் நின்று அரவணைக்கும்'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் இன்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை வகித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், "சமூகத்தின் இருண்ட நிலையை நீக்கி ஒளியூட்டும் உதயசூரியன் நம்மிடம் இருக்கிறது. கடந்த ஆண்டு மே 7-ம் தேதி திமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வராக பதவியேற்கும் போது சிறு தயக்கம் இருந்தது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிகாலத்தில் நடைபெற்ற சீர்கேடுகளை ஓராண்டில் சரி செய்ய முடியுமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தமிழகம் எழுச்சி பெற்றிருக்கிறது. உறங்கி கிடந்திருந்த நிர்வாகம் பேரெழுச்சி பெற்றிருக்கிறது. ஓராண்டு காலத்தில் மிகப்பெரிய நம்பிக்கை கிடைத்துள்ளது. இந்தியாவின் சிறந்த மாநிலமாக, அனைத்து வளங்களையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

வழக்கமாக மேட்டூரில் ஜூன் 12-ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர்கள் குறுவை சாகுபடி பெற முடியும். அதிமுக ஆட்சியில் ஒரு முறை மட்டுமே ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளில் காலதாமதமாகவே திறக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. நடப்பாண்டில் இயற்கையே இந்த ஆட்சிக்கு ஆசி வழங்கியது போல தண்ணீர் வரத்து அதிகமாகிவிட்டது. நாடு விடுதலை அடைந்த பிறகு மே மாதத்தில் தண்ணீர் திறப்பது இதுதான் முதல் முறையாகும். மக்கள் மட்டுமல்ல இயற்கையே நம் பக்கம் இருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம்.

ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

பெண்களுக்கு இலவச பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு வேலைக்கு, தனியார் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான மாத செலவில் ரூ.2500 மீதமாகியுள்ளது. மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு சென்றடைந்துள்ளது.

2500 திருக்கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் முழுமையாக பதிவேற்றப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உண்மையான ஆன்மிகவாதிகள் என்றால் திமுக அரசை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் மதவாதத்தை தூண்டி திமுக அரசு அவதூறு பரப்பி வருகிறார்கள். திமுக அரசு கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியை விட ஓராண்டில் அனைத்து வித சாதனைகளையும் செய்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல் விலையை குறைப்போம் என சொல்லி ரூ.3 குறைத்துள்ளோம். ரூ.1,160 மதிப்பிலான சலுகை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. மத்திய அரசு வரியை குறைக்கும்போது மாநில அரசின் வரியும் குறையும். 2014-ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்கும் இருந்த விலை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒப்பிட்டுப் பார்த்தால் மத்திய அரசு இன்னும் விலையை குறைக்க வேண்டும். ஐந்து மாநிலங்களில் தேர்தல் வந்ததால் குறைக்கப்பட்ட விலை மீண்டும் ஏற்றப்பட்டது அதிகமாக உயர்த்தி விட்டு, குறைவாக குறைக்கிறார்கள். மக்களோடு மக்களாக இருக்கும் மாநில அரசு கல்வி, மருத்துவம், மின்சாரம், சத்துணவு உள்ளிட்டவை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி பணியாற்றுவதற்காக உரிய நிதி ஒதுக்கீடு மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.21,190 கோடி இதுவரை வரவில்லை. பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.

திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், சமூக நீதியும் இணைந்தது. பெரியார், அண்ணா , கலைஞர் வழியில் திமுக தொண்டர்கள் திராவிட மாடலை எட்டுத் திக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழை வளர்த்தது, சாதியை ஒழித்தது என பல்வேறு சிந்தனைகளை திமுக கொண்டு வந்துள்ளது. 5 முறை தமிழகத்தை ஆட்சி செய்து கலைஞர் கருணாநிதி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். சுயமரியாதை, மாநில சுயாட்சியை திராவிட மாடல் ஆட்சிதான் நிறைவேற்றியுள்ளது. திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது. சீர் செய்யும். யாரையும் பிரிக்காது. அனைவரையும் ஒன்று சேர்க்கும். அனைவரையும் சமமாக நடத்தும். தோளோடு தோள் நின்று அரவணைக்கும்.

நரிக்குறவர்கள், இருளர் இன மக்கள், மாற்றுத் திறனாளிகள் என நலிவுற்றுவர்களின் தேவையை நிறைவேற்றப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் மட்டுமன்றி தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால், உலகின் மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in