உள்ளாட்சிகள் தினத்தில் கிராம சபைக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் இடம் அறிவிப்பு!

உள்ளாட்சிகள் தினத்தில் கிராம சபைக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் இடம் அறிவிப்பு!

சென்னையில் நாளை நடைபெற இருக்கும் கிராமசபைக் கூட்டம் ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தொடங்கி வைக்க இருக்கிறார்.

ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளன்று உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (01.11.2022) கிராமசபைக் கூட்டம் நடத்தத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகளில் கிராமசபைக் கூட்டத்தைப்போல், நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டு தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைத்துள்ளன.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் 6-வது வார்டில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுத் தொடங்கி வைக்கிறார். பின்னர், அங்குள்ள திறந்தவெளி அரங்கில் வார்டு மக்களின் குறைகளை அவர் கேட்டு அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பார். அதுபோல தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அந்தந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறார்கள். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in