`நீட் விலக்கு பெறுவதே எனது லட்சியம்; குடும்பத் தலைவிக்கு ரூ.1000 அடுத்த மாதம் அறிவிப்பு'- ஈரோட்டில் முதல்வர் அதிரடி

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்  பிரச்சாரம்
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் `நீட் விலக்கு பெறுவதே எனது லட்சியம்; குடும்பத் தலைவிக்கு ரூ.1000 அடுத்த மாதம் அறிவிப்பு'- ஈரோட்டில் முதல்வர் அதிரடி

நீட் மருத்துவத் நுழைவு தேர்வுக்கு விலக்கு பெறுவதே எனது லட்சியம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் எப்போது தரப்படும் என்பது அடுத்த மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று ஈரோடு பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக கூறினார்.

ஈரோட்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "உங்களைத் தேடி வந்திருக்கிறேன். உங்களை நாடி வந்திருக்கிறேன். கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். பெரியார் பிறந்த மண் இந்த ஈரோடு. பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த ஊர் இந்த ஈரோடு. தலைவர் கலைஞர் அவர்கள் குடியிருந்த ஊர் இந்த ஈரோடு. ஏன் திமுகவின் அடித்தளமே இந்த ஈரோடு தான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் தலைவர் கலைஞரின் குருகுலமாக இருந்தது தான் இந்த ஈரோடு. தலைவர் கலைஞர் அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தது இந்த ஈரோட்டில் தான்.

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்  பிரச்சாரம்
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த ஈரோட்டிலே நடைபெற இருக்கிற இடைத்தேர்தலில் நம்முடைய வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன். இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது, என்ன சூழலில் வந்திருக்கிறது, எப்படிப்பட்ட நிலையில் வந்து இருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் இந்த தொகுதியிலே நமது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பிலே காங்கிரஸ் கட்சியினுடைய வேட்பாளராக இருந்த அருமை தம்பி ஈவேரா திருமகன் இந்தத் தொகுதிக்கு அவர் ஆற்றிய அரும் பணிகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

46 வயதுடைய ஒரு இளைஞர் தீவிரமாய் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சிறப்பாக கட்சிக்கு மட்டும் அல்ல, இந்தத் தொகுதி மக்களுக்கு இந்த சமுதாயத்திற்கு அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென்று அகால மரணம் அடைந்துவிட்டார். அந்த செய்தியை கேட்டு அவருடைய தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மட்டுமல்ல, நான் மட்டுமல்ல, இந்த தொகுதியில் இருக்கிற மக்கள் எல்லோரும் வேதனைக்கு ஆளானார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம். எப்போதுமே தந்தை இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு மகன் வருவார். ஆனால் நம்முடைய சூழல் என்ன என்று கேட்டால், இது யாருக்கும் வரக்கூடிய ஒரு சூழ்நிலையாக இருக்கக்கூடாது. மகன் இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு அவருடைய தந்தையாக இருக்கக்கூடிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்றைக்கு உங்களிடத்தில் வந்திருக்கிறார். ஆகவே இதை புரிந்து கொண்டு நீங்கள் மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்  பிரச்சாரம்
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வரணும், ஆட்சி பொறுப்புக்கு வருகிற நேரத்தில் இதையெல்லாம் நீங்களும் செய்து தர வேண்டும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகள் அவைகள் எல்லாம் நிறைவேற்றி தர வேண்டும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் வாக்களித்தீர்கள். வாக்களித்த நம்பிக்கையோடு இன்றைக்கு நீங்கள் இருக்கிறீர்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்த இரண்டு ஆண்டு காலத்தில் செய்திருக்கக் கூடிய சாதனைகளை சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஒரு மிகப்பெரிய பட்டியலை எடுத்துச் சொல்ல வேண்டும். ஏதோ பொத்தாம் பொதுவாக அல்ல, ஆதாரத்துடன் உங்களிடம் குறிப்பிட்டு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 234 தொகுதிகளில் உள்ள மக்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீட் மருத்துவ நுழைவு தேர்வுக்கு விலக்கு பெறுவது எனது லட்சியம்.

திமுக தேர்தல் அறிவிப்பு வாக்குறுதிகளில் முக்கியமாக ஒன்று இருக்கிறது. அதை நீங்க மறந்தாலும் நான் மறக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். ஏன் மக்களே மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். அது தான் உரிமைத்தொகை. பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய உரிமைத்தொகை. குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொன்னோம். நிதி நிலைமையை ஒழுங்காக வைத்துக் கொண்டு போயிருந்தீர்கள் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதையும் நிறைவேற்றி இருப்போம்.

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்  பிரச்சாரம்
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

கொள்ளையடித்துப் போனீர்களே, கஜானாவை காலியாக வைத்தது, மட்டுமல்ல கடனை வைத்துக் கொண்டு போயிருக்கிறீர்கள். அதனை நாங்கள் சரி செய்து கொண்டிருக்கிறோம். அவைகள் எல்லாம் சரி செய்யப்பட்ட உடனே நிச்சயமாக சொல்கிறேன், வருகிற மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பதனை அறிவிக்கப் போகிறோம். இது ஸ்டாலின் சொன்ன வார்த்தை. எடப்பாடி சொன்ன வார்த்தை அல்ல. இது ஸ்டாலின் சொல்கிற வார்த்தை. ஆகவே நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. சொன்னதை செய்வோம், சொல்வதைத்தான் செய்வோம், சொல்லாததையும் செய்வோம், சொல்லாதவையும் செய்து கொண்டே இருப்போம். இது மக்களுக்காக பாடுபடக்கூடிய ஆட்சி.

இங்கே வந்து என்னுடைய தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்த போது அவர் சொல்லிவிட்டு போயிருக்கிறார். ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றியை தேடி தரணும் என்று. நான் கேட்கிறேன், உதயநிதி ஸ்டாலின் சொன்னதை தாண்டி அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்க கூடிய அளவுக்கு உங்கள் வாக்கு இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். அந்த வெற்றியை தேடித் தருவீர்களா? நிச்சயமா, உறுதியாய், சத்தியமாய், நன்றி வணக்கம்" என்று தனது பேச்சை முடித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in