`ஓ' போடுகிறார் டிஜிபி; முதல்வர் பதவியிலிருந்து ஸ்டாலின் ராஜினாமா செய்யணும்: கள்ளச்சாராயத்தால் ஈபிஎஸ் ஆதங்கம்

ஈபிஎஸ்
ஈபிஎஸ்முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்

கள்ளச்சாராயம் விவகாரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ், ‘’ விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 9 பேர் இறந்துள்ளதாகவும், பலர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆள்வதால் இப்படிப்பட்டக் கொடுமைகள் எல்லாம் நடக்கிறது. கள்ளச்சாராயம் தமிழகத்தில் பெருகிக் கொண்டிருக்கிறது என சட்டமன்றத்தில் பேசினேன். அதையெல்லாம் அரசாங்கம் கருத்தில் கொண்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது.

இந்த விவகாரத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். அதனால் அவர் தார்மீக பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கஞ்சா விற்பனை தொடர்பாக ’ஓ’ போடுவதை மட்டுமே தமிழக டிஜிபி வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. ஒரு திறமையற்ற முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பில் உள்ளார். நாளை மரக்காணம் சென்று உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளேன். தமிழகத்தில் போலி மதுபானம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in