
செய்தி பார்த்தாலும் சரி, சினிமா பார்த்தாலும் சரி கார் பிரியர்களின் கண்கள் அதில் வருகிற கார்களின் மீது பதிவது இயற்கை. ”இது என்ன கார் தெரியுமா? இதுல என்னென்ன வசதி இருக்குதுன்னு தெரியுமா? இதோட ரேட் தெரியுமா?” என்று கேட்டுப் பக்கத்தில் இருப்பவர்களைப் படுத்தியெடுத்துவிடுவார்கள். நாளிதழ்களின் மாவட்டச் செய்தி பக்கத்தில் ஏதாவது கார் விபத்து பற்றிய செய்தியைப் படித்தால், ”ச்சே... ஒண்ணு கார் படத்தைப் போட்டிருக்கணும். இல்லைன்னா, அது என்ன மாடல் கார்னு செய்தியிலேயாவது போட்டிருக்கணும். இவ்வளவு சாதாரண விபத்துல இத்தனை உயிர்ப்பலின்னா, அந்த மாடல் எவ்வளவு பாதுகாப்புக் குறைவானதா இருந்திருக்கும்?” என்று சமூக அக்கறையோடும் கேட்பார்கள்.
அந்த வகையில், ‘6 மாதத்தில் 4 கார்களை மாற்றிய முதல்வர்’ என பாஜக தரப்பிலிருந்து இப்போது ஒரு செய்தி பகிரப்படுகிறது. இது உண்மையாக இருக்குமா என்று விசாரிக்க ஆரம்பித்தோம்.
சமீபமாக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்ற செய்தியாளர்களிடமும், திமுகவினரிமும் பேசியபோது ஓரளவு விவரங்களை மட்டுமே சேகரிக்க முடிந்தது. நல்வாய்ப்பாக முதல்வரின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தைப் பார்வையிட்டபோது, அவர் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரில் சென்ற வீடியோ காட்சியைப் பார்க்க முடிந்தது. அவற்றில் அவர் காரில் வரும் காட்சிகளை மட்டும் நிறுத்தி உற்றுநோக்கியபோது, முதல்வர் இப்போது புதிய காருக்கு மாறியிருப்பதை உறுதி செய்ய முடிந்தது.
அது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் - Land Rover Defender (பதிவு எண்: TN01 BV 2345). அதற்கு முன்பு அவர் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் வாகனத்தைப் பயன்படுத்திவந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக கடந்த 5.8.2021 அன்று சென்றபோதுகூட அவர் அந்தக் காரைத்தான் பயன்படுத்தினார்.
நவம்பர் மாதத்தில் இருந்து அவர் புதிய காரைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. கடந்த 13.11.2021 அன்று கடலூர் மாவட்ட வெள்ளச் சேதங்களைப் பார்வையிட முதல்வர் சென்றதும், 15.11.2021 அன்று கன்னியாகுமரி மாவட்ட வெள்ளச் சேதங்களைப் பார்வையிடச் சென்றதும் இந்தப் புதிய டிஃபெண்டர் காரில்தான்.
அதேநேரத்தில், நேற்று (22.11.2021) கோவை வ.உ.சி. மைதானம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த விழாக்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரிண்டர் (Mercedes-Benz Sprinter) வேனில் (அதன் பதிவு எண்ணும் 2345 தான்) காரில் வந்தார் முதல்வர். பொதுவாக பிரச்சாரப் பயணங்களுக்குச் செல்லும்போது இந்த வாகனத்தை அவர் பயன்படுத்துவது வழக்கம். தேர்தலையொட்டி நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்டபோது இந்த வாகனத்தைத்தான் அவர் பயன்படுத்தினார். இடையிடையே பிரச்சார வேனிலும் ஏறிப் பேசினார்.
முதல்வராகப் பதவியேற்பதற்காக கடந்த மே 7ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்காக மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய கார், டாயோட்டோ லேண்ட் குருசியர் பிராடோ (Land Cruiser Prado). இதே ரக காரைத்தான் முதல்வராக இருந்த ஜெயலலிதா கடைசியாகப் பயன்படுத்தினார். ஜெயலலிதா மறைந்ததும், அதே காரில், அதே இருக்கையில் உட்கார்ந்து சசிகலா சிறை சென்றதும் இந்தக் காரில்தான் (பதிவு எண் TN 09 BX 3377). நமக்கு அது பிரமிப்பான காராகத் தெரியலாம். ஆனால், பழைய மாடல் என்று அந்தக் காரின் தயாரிப்பையே டொயோட்டா நிறுவனம் நிறுத்திவிட்டது.
தலைப்புக்கு வருவோம். பாஜகவினர் சொல்வது பாதி உண்மை. அதாவது, முதல்வர் டிஃபென்டர் என்ற புதிய காரைப் பயன்படுத்தி வருகிறார் என்பது முற்றிலும் உண்மை. ஆனால், 6 மாதத்தில் 4 கார் மாறினார் என்பது உண்மையல்ல. லேண்ட் குருசியர் பிராடோ காரை 2 ஆண்டாகவும், மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரிண்டர் வேனை ஓராண்டாகவும் அவர் பயன்படுத்தி வருகிறார்.