நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டம்: புறக்கணிக்க அதிமுக முடிவு?

நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டம்: புறக்கணிக்க அதிமுக முடிவு?

இட ஒதுக்கீடு பிரச்சினையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகக் கூறி நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும், 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப்போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதே போல இந்த தீர்ப்புக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நவ. 12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளின் சட்டப் பேரவைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்  போடுவதாகக் கூறி இக்கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in