பேனாவை மூடு... எதிராகப் பேசினால் கேடு!

விமர்சனங்களைக் கண்டு அஞ்சுகிறதா திமுக அரசு?
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்த கையோடு முந்தைய ஆட்சியாளர்களால் ஊடகங்களின் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது கருத்துச் சுதந்திரம் குறித்து அதிகம் பேசிய இயக்கம் திமுக. ஆனால் இப்போது பொதுவெளியில் எதிர்குரல் எழுப்புவோர் மீது வழக்குகளை பாய்ச்சி ஒடுக்கும் வேலையைக் கனகச்சிதமாக செய்வதாக தமிழக அரசைச் சுற்றி சர்ச்சை சுழல்கிறது.

சாட்டை துரைமுருகன் கைதான போது...
சாட்டை துரைமுருகன் கைதான போது...

ஜி ஸ்கொயர் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மீதே எஃப்.ஐ.ஆர் போட்டிருப்பது அண்மை உதாரணம். இந்த விவகாரத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளே சங்கடத்தில் நெளியும் அளவுக்கு இருக்கின்றன போலீஸ் நடவடிக்கைகள்.

மாரிதாஸ், கிஷோர் கே.சுவாமி என வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள் திமுகவை கடுமையாகச் சாடிவருகிறார்கள். ஆட்சிக்கு வந்ததுமே இவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியது திமுக. இதேபோல் திமுகவை அதிகம் விமர்சிக்கும் சாட்டை துரைமுருகனும் கைதுசெய்யப்பட்டு இன்னமும் சிறைக் கம்பிகளுக்குள் இருக்கிறார்.

மாரிதாஸ்
மாரிதாஸ்

திமுக ஆட்சியை விமர்சித்து எழுதுபவர்கள், பேசுபவர்கள் மட்டுமல்லாது ஆட்சியை விமர்சிக்கும் எதிர்க்கட்சி பிரபலங்களும் வழக்குகளால் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுவதாகச் சொல்லும் அதிமுகவினர், அதற்கு உதாரணமாக, முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் மீது போடப்பட்ட வழக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமையின் அடிப்படையில் அவை இயங்குகின்றன. ஆளும்கட்சிக்கு துதிபாடினால் மட்டும் தான் கருத்துச் சுதந்திரம் என்பதே இன்றைய தமிழக அரசின் பார்வை. மக்களின் அவலநிலைகளை எடுத்துச் சொன்னால் ஊடகங்களின் மீது ஜனநாயகத் தாக்குதலை நிகழ்த்துகின்றனர். ஜூனியர் விகடன் மீது போடப்பட்ட வழக்கை அனைத்து ஊடகங்களுக்குமான மிரட்டலாகத்தான் அதிமுக பார்க்கிறது.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனைக் கடிக்கும் கதை எனச் சொல்வார்கள். அதை திமுக செய்து காட்டுகிறது. அரசின் அவலங்களை மக்கள் மன்றத்தில் சொன்னதை மனதில் வைத்துத்தான் என் மீதும் வழக்கு போட்டார்கள். இவர்களுக்கு சகிப்புத்தன்மை என்பதே இல்லை. ஆளும்கட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கவேண்டியது எதிர்கட்சிகளின் கடமை.

அந்தவகையில் தான் ஆளும்கட்சியின் அவலங்களை அவ்வப்போது பேசிவருகிறேன். அதற்காக என் மீது காழ்ப்புணர்ச்சியுடன் 4 வழக்குகளைப் போட்டார்கள். கிட்டத்தட்ட இருபத்தைந்துக்கும் அதிகமான பிரிவுகளில் என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முகாந்திரமே இல்லாமல் போடப்பட்ட பொய் வழக்குகள் அவை. தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை எந்த அரசியல்வாதி மீதும், இத்தனை பிரிவுகளில் வழக்குப் போட்டது இல்லை. வழக்கிற்கு மேல் வழக்கு போட்டாலும் நான் இந்த ஆட்சியின் அவலங்களுக்கு எதிராக இன்னும் வீரியத்துடன் பேசிக்கொண்டே இருக்கிறேன்; இருப்பேன்.

என் குரல்வளையை நெருக்க வழக்கு என்னும் பெயரில் அச்சுறுத்துகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சும் இயக்கம் அதிமுக அல்ல. சமூகவலைதளங்களில் எதிர்கருத்து எழுதுபவர்களைக்கூட இந்த அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இம்மென்றால் சிறைவாசம்... ஏன் என்றால் வனவாசம் என்னும் அடிப்படையில் தான் இன்று தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது” என்றார் அவர்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறதா என்ற கேள்வியை திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் முன்வைத்தோம். “கருத்துரிமைக்கு ஒரு அரசு நிச்சயம் மதிப்புத்தர வேண்டும். ஆனால் அதேநேரத்தில், கருத்துரிமை என்கிற பெயரில் தமிழகத்தின் தட்ப வெப்பநிலையை கொதிநிலைக்கு கொண்டு செல்வதற்கும் சிலர் முயற்சிக்கின்றனர். சமூக பொறுப்பே இல்லாமல் அப்படி எழுதுகிறவரை, பேசுகிறவரை கண்டிக்க வேண்டிய பொறுப்பும், தண்டிக்க வேண்டிய கடமையும் அரசுக்கு இருப்பதாகவே நான் கருதுகிறேன். மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு இல்லாத பிரச்சினையை, இருப்பதாகக் காட்டி இந்த மண்ணில் சமூக அமைதியை சீர்குலைக்கப் பார்த்தவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பட்டினப்பிரவேசம் என்னும் பெயரால், அதைக் காரணமாக வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ரத்த அத்தியாயத்தை எழுதக் காத்திருந்த பாசிஸ்ட்களிடம் இருந்து, தமிழகத்தை பாதுகாக்கத்தான் பட்டினப்பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மதுரை மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ரத்தினவேல் அங்கே சம்ஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தார்கள் என்னும் பெயரால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கரோனா காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டார் எனச் சொன்னதும், அவர் மீண்டும் டீனாக நியமிக்கப்பட்டார்.

இப்படி ஒவ்வொரு பிரச்சினையிலும், தேவையில்லாத பதற்றத்தை பற்றவைக்க பலர் முயற்சித்தாலும் அதற்கு இடம் கொடுக்காதவகையில் இந்த மண்ணில் பாசிஸ்ட்களுடைய தப்பாட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என்னும் அடிப்படையில் தான் ஒருசிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் முறையிடுவதற்கும், நியாயம் பெறுவதற்கும் அவர்களுக்கு இருக்கிற உரிமையை அரசு மறுக்கவில்லை. ஆகவே, கருத்துரிமைக்கு எதிரான அரசு இந்த அரசு என்று சொல்வது அபத்தம். அதை என்னால் ஏற்கமுடியாது. நியாயமான, தகுதியான விமர்சனத்தை மேடையில் பேசுபவர்கள், ஆர்ப்பாட்டத்தில் பேசுபவர்கள் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை இந்த அரசு காது கொடுத்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது” என்றார்.

இடித்துரைப்பார் இல்லாத மன்னன் கெடுப்பார் இல்லாமலே கெட்டுவிடுவான் என்பது வள்ளுவன் வாக்கு. அதுபோல ஆட்சிக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போது அதை திறந்த மனதுடன் எதிர்கொள்வது தான் நல்ல ஆட்சிக்கு அழகு. ஒருவேளை, அத்தகைய விமர்சனங்கள் அவதூறு பிரச்சாரமாக இருக்கும் பட்சத்தில் அதை சட்டரீதியாக எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். அப்படியில்லாமல் வழக்கு, கைது என்பதெல்லாம் நல்ல ஆட்சிக்கான அடையாளத்தைக் கெடுத்து விடும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in