திமுக உட்கட்சி தேர்தலில் ரத்தக்களறி: மனு செய்ய வந்தவரை துரத்தி துரத்தித் தாக்கிய உடன்பிறப்புகள்!

திமுக உட்கட்சி தேர்தலில் ரத்தக்களறி: மனு செய்ய வந்தவரை துரத்தி துரத்தித் தாக்கிய உடன்பிறப்புகள்!

குன்றத்தூர் திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிர்வாகியை அக்கட்சியினரே கடுமையாகத் தாக்கினர். சட்டை கிழிந்த நிலையில் வெளியேறிய திமுக பிரமுகர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட 15-வது அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் குன்றத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குன்றத்தூர், காட்டாங்கொளத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட 10 ஒன்றிய நிர்வாகிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

இதில் திருப்போரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ரோஸ் நாகராஜன் என்பவர் ஒன்றிய செயலாளருக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காகச் சென்றார். அப்போது அங்கிருந்த திருப்போரூர் ஒன்றிய நிர்வாகிகள் அவரின் சட்டையைக் கிழித்து, கடுமையாகத் தாக்கினர். அப்போது வெளியில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் மண்டபத்தில் உள்ளே வந்து அவரை மீட்டனர். ஆனால், காவல்துறையினரின் பாதுகாப்பிலிருந்த போதே அவரைக் கடுமையாகத் தாக்கினர்.

இதனால் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே வந்த ரோஸ் நாகராஜன் கிழிந்த சட்டையோடு குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அங்கு வந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா அவரின் கிழிந்த சட்டைக்கு மாற்றாக காரில் வைத்திருந்த புதிய சட்டையை அவருக்குக் கொடுத்துள்ளார். இந்த களேபரங்களால் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட சலசலப்பை அடுத்து அதன் நுழைவாயில் பூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. திமுகவினரின் மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in