திமுக - நாதக மோதல்: மாநில நிர்வாகியின் மண்டை உடைப்பு

அன்பு தென்னரசு
அன்பு தென்னரசு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நேற்று இரவு, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு  இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அங்கு பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. களத்தில் 77 வேட்பாளர்கள் இருந்தாலும் அங்கு காங், அதிமுக, நாதக, தேமுதிக என  நான்கு முனை போட்டியே நிலவுகிறது. அதிலும் குறிப்பாக திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும்,  அதிமுக கூட்டணி  வேட்பாளர் தென்னரசுவுக்கும் இடையேதான்  நேரடி போட்டி நிலவுகிறது.  

எனினும் அங்கு  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவுக்காக அக்கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி மாநிலம்  முழுவதும் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு  வந்து சேர்ந்து பகுதி வாரியாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். ஏழை எளிய மக்களிடம் அவர்கள் செய்யும் பிரச்சாரம் நன்றாகவே எடுபடுகிறது. 

அதிலும்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாதி ரீதியாக பேசி ஓட்டு வேட்டையாடி வருகிறார். இதனால் திமுகவினர் நாம் தமிழர் கட்சியின் மீது ஆத்திரத்தில் இருக்கின்றனர்.  இந்த நிலையில் நேற்று இரவு ராஜாஜிபுரத்தில்  நாம் தமிழர் கட்சியினர் தங்கள் வேட்பாளருக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த திமுக தொண்டர்களுக்கும் அவர்களுக்கும்   இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருதரப்புக்கும் இடையே பின்னர்  கடுமையான மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.  இதில் நாம் தமிழர்  கட்சி தொழிலாளர் அணியின்   மாநில நிர்வாகி அன்பு தென்னரசுவின் மண்டை உடைக்கப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்டித்து மற்ற பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த  நாம் தமிழர் கட்சியினர் அனைவரும்  அங்கு கூடி அன்பு தென்னரசுவை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியினரையும், சீமானையும் கைது செய்யக்கோரி திமுகவினரும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனைவரையும் கலைந்து போக செய்தனர். 

மண்டை உடைக்கப்பட்ட அன்பு தென்னரசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சனை இன்றைய நாளில் பூதாகரமாக வெடிக்கக்கூடும் என்பதால் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in