தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சத்யபிரதா சாஹூ
சத்யபிரதா சாஹூ

தமிழகத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி அதிக வாக்காளர்களைக் கொண்டது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. அதில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலை அவர் வெளிட்டார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணியைத் தொடங்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவர் கூட விடுபடக்கூடாது. தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 7,758 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " இன்று முதல் டிச. 8-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தும் பணியை மேற்கொள்ளலாம். மரணமடைந்த 2.44 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் " என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in