‘போராட்டத்தில் குழந்தைகளை பயன்படுத்தினார்’ - ஆதித்ய தாக்கரே மீது எப்ஐஆர் பதிவு செய்ய நோட்டீஸ்

‘போராட்டத்தில் குழந்தைகளை பயன்படுத்தினார்’ - ஆதித்ய தாக்கரே மீது எப்ஐஆர் பதிவு செய்ய நோட்டீஸ்

‘சேவ் ஆரே’ போராட்டத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு மும்பை போலீஸ் கமிஷனருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய நோட்டீஸில், “ ‘சேவ் ஆரே’ போராட்டத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்து இந்த விஷயத்தை அவசரமாக விசாரிக்குமாறு தேசிய ஆணையம் கேட்டுக்கொள்கிறது. சிறார் நீதிச் சட்டத்தின்படி குழந்தைகளை அடையாளம் கண்டு குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்த வேண்டும். அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை மற்றும் எஃப்ஐஆர் நகல் மற்றும் குழந்தைகளின் அறிக்கை ஆகியவை இந்த கடிதம் கிடைத்த 3 நாட்களுக்குள் கமிஷனுடன் பகிரப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று ஆதித்யா தாக்கரே ‘சேவ் ஆரே’ போராட்டத்தில் கலந்துகொண்டார். ஆதித்யா தாக்கரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள படங்களில், போராட்டக்காரர்கள் மத்தியில் குழந்தைகள் பலகைகளை ஏந்தியிருக்கும் படங்களும் உள்ளன. அந்த ட்வீட்டில்"ஆரே எங்கள் நகரத்தில் உள்ள ஒரு தனித்துவமான காடு. உத்தவ் தாக்கரே ஜி 808 ஏக்கர் ஆரேயை பாதுகாக்கப்பட்ட காடாக அறிவித்தார். இங்கிருந்து கார் ஷெட் வெளியேற வேண்டும். நமது மனித பேராசை மற்றும் இரக்கமின்மையால் நம் நகரத்தின் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்க அனுமதிக்க முடியாது" என்று ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.

1,800 ஏக்கர் வனப்பகுதியில் உள்ள ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முனிசிபல் கார்ப்பரேஷனின் அனுமதியை 2019-ல் கோரியபோது இந்த பிரச்சினை வெடித்தது. 2014-19 ஆட்சியில் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்தபோதும் கூட சிவசேனா இந்தத் திட்டத்தை எதிர்த்தது. அதன்பின்னர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபியின் மகா விகாஸ் அகாடி அரசு, மெட்ரோ ஷெட் திட்டத்தை கஞ்சூர்மார்க்கிற்கு மாற்றப்படும் என்று அறிவித்தது. ஆரே-யை பாதுகாக்கப்பட்ட வனமாகவும் அறிவித்தது. தற்போது ஏக்நாத் ஷிண்டே அரசு இத்திட்டத்தை மீண்டும் ஆரே-வுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in