
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணத்தைக் காரணம் காட்டி 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்குக் கடத்தியதாக 24 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை உறுப்பினர் மகாதேவ் ஜாங்கர் எழுப்பிய குழந்தை மணப்பெண்கள் மற்றும் பெண் கடத்தல் தொடர்பான கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தேவேந்திர பட்னாவிஸ், “இந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணத்தை காரணம் காட்டி பெண்கள் மற்றும் குழந்தை மணப்பெண்களைக் கடத்தியதாக 24 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021 ம் ஆண்டில், இத்தகைய குற்றச்சாட்டில் 448 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஏழை பெண்கள் மற்றும் குழந்தை மணப்பெண்கள் ராஜஸ்தான், குஜராத்தில் விற்கப்படுகின்றனர்” என்று கூறினார்.
குழந்தை திருமணம் என்பது 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியை, வயது வந்த ஆணுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் நடைமுறையாகும், இது இந்தியாவில் கடுமையான குற்றமாகும்.