முதல்வர் ஸ்டாலின் வருகிறார்; மனுக்களை கொடுங்கள்: மக்களைத் தேடிச் செல்லும் அதிகாரிகள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செல்லும்போது மக்கள் அவரைச் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களைக் கொடுப்பார்கள்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக அரிதான சிலமாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவரிசையில் முதல்வர் வருகையை முன்னிட்டு முன்கூட்டியே மக்களின் கோரிக்கைகளை மனுக்களாகப் பெற்று, அவற்றில் நியாயமான கோரிக்கைகளுக்கு முதல்வரே நலத்திட்ட உதவிகள் வழங்க வரும்போது தீர்வு தந்து செல்லும் ஆச்சர்யமான மாற்றம் நிகழ்ந்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் குறைகளைக் களையும் வகையில் செயல்பட சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில்கூட தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நிலவும் தலையாய பத்து பிரச்சினைகளைப் பற்றிய பட்டியலைக் கோரியிருக்கிறார். அந்தவரிசையில் தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதற்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், முதல்வர் வருகையை ஒட்டி தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மக்களும், தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவரவரது கிராமத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்பிக்க கோரப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இந்த மனுக்களை சமர்பிக்கக் கோரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் மதிப்பீட்டிற்குப் பின்பு தாசில்தாருக்கு செல்லும். அவரால் பரிந்துரைக்கப்படும் மனுவுக்கு முதல்வர் வருகையின் போது நலத்திட்ட உதவிகளும், பிரச்சினைகளுக்கான தீர்வும் கிடைக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

முதல்வர் வருகையை ஒட்டி, பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெறும் சம்பவம் தென்காசி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in