உத்தராகண்ட், கோவா மாநிலங்களுக்கு முதல்வர்கள் அறிவிப்பு

நீண்ட இழுபறிக்கு பின் பாஜக அறிவித்தது
கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்
கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்

நீண்ட இழுபறிக்கு பிறகு உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களுக்கு முதல்வர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் 47 இடங்களில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் பிடித்தது. அதே நேரத்தில் காதிமா தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். இதனால் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி கடந்த சில நாட்களாக பாஜகவில் எழுந்தது. இந்த நிலையில் டேராடூனில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மெஜாரிட்டி இல்லாததால், 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முதல்வராக புஷ்கர் சிங் தாமி
முதல்வராக புஷ்கர் சிங் தாமி

இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரமோத் சாவந்த் பாஜக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் பதவியேற்க உள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பிரமோத் சாவந்த், "அடுத்த 5 ஆண்டுகளுக்கு கோவா முதல்வராக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கோவா மக்கள் என்னை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in